Monday, June 17, 2013

திட்டமிடத் தவறுவதால் ஆசிரியர்கள் சந்திக்கின்ற பாடுகள்!


This article is to explain the suffering of teachers faced because of their failure in planning. I always give priority to write in my own language, Tamil.

இன்று நான் ஒரு பின்தங்கிய 2ம் படிவ வகுப்பில் நன்னெறி பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். 3 அல்லது 4 மாணவர்களைத் தவிர மற்றவர்களைக் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவது சிரமமான காரியம். பெரும்பாலும் வகுப்பில் உட்கார்ந்து கொண்டு கதை பேசுவர்; இன்னும் சிலர் ஆசிரியர் வகுப்பில் இருக்கும் போதே காணாமல் போய் விடுவர்; இன்னொரு கூட்டமோ ஏதாவது குறும்புத் தனமாக விளையாடிக் கொண்டிருப்பர்.

இப்படிப்பட்ட நிலைமையில் ஓர் ஆசிரியர் நேர்மையான முறையில் பாடம் நடத்த வேண்டும் என்றால், இயலாத காரியம் என்று இதனை வாசிக்கிற அனைவரின் மனசாட்சியும் சொல்லும். அதற்கென்று வகுப்பில் சும்மா உட்கார்ந்து கொண்டு எப்படியாவது போகட்டும் என்று விட்டு விடவும் முடியாது. நீண்ட காலமாக இந்தப் பிரச்சனையைப் பார்த்துக் கொண்டிருப்பதால், ஒரு தீர்வையும் கடந்தாண்டே தீர்மானித்து விட்டேன்.

ஏறக்குறைய நான் தொழிலில் ஓய்வு பெறும் வரைக்கும் இந்தப் பாடத்தைப் போதிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு வாரமும் குறைந்த்து இரண்டு வகுப்புகளுக்குப் போதனை நடத்த வேண்டும். நன்னெறி பாடத்தில் மாணவர்களுக்குக் குறிப்பு வழங்குவது, பயிற்சி வழங்குவது, PBS மதிப்பீடு செய்வது என்பது ஒவ்வொரு வகுப்புக்கும், ஒவ்வொரு ஆண்டும் தொடர் நடவடிக்கையாகும்.

நன்னெறி பாடத்திற்கு ஆண்டு தோறும் ஒரே மாதிரியான குறிப்பைதான் மாணவர்களுக்கு வழங்குகிறோம். அத்தோடு, ஒரு வகுப்புக்கு வழங்குகிற குறிப்பையே அடுத்த வகுப்புக்கும் வழங்க வேண்டும். எனவே, குறிப்புகளைக் கடந்தாண்டே தயாரித்து வைத்துக் கொண்டேன். (எனது குறிப்புகளை http://www.wargasivik.blogspot.com/ என்ற வலைப்பூவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்). சுமார் 15 பக்கங்களில் அந்தக் குறிப்புகள் அடங்கியிருக்கும். விடுமுறையிலேயே அதனை டைப் செய்து கொண்டேன். (விடுமுறையில் enjoy பண்ண வேண்டும் என்று நினைத்தால், ஆண்டு முழுவதும் திண்டாட்டம்தான்). அந்தப் 15 பக்கங்களையும் 50 நகல்கள் எடுத்துக் கொண்டு கோர்த்துக் (Binding) கொண்டேன். ஒவ்வொரு முறையும் மாணவர்களுக்குக் குறிப்பு கொடுக்க வேண்டிய தினங்களில் அவற்றை மாணவர்களிடத்தில் ஒப்படைத்து, எழுதச் சொலவேன். எழுது பலகையில் எழுத வேண்டிய அப்பியாசம் இல்லாததால், மாணவர்களை முழுமையாகக் கண்காணிக்க முடியும். மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடா விட்டாலும் பரவாயில்லை. ஆனால், சத்தம் போடுதல், சண்டையிடுதல், விளையாடுதல், வகுப்பில் இருந்து காணாமல் போகுதல் போன்ற தகாத காரியங்களைத் தடுப்பதற்கு வாய்ப்பு இருக்கும்.

நமது பாடம் அந்த வகுப்பில் முடிந்தவுடன் மாணவர்கள் கையில் உள்ள தாளை திரும்ப வாங்க மறக்க கூடாது. ஏனென்றால் அதனை நாம் மற்ற வகுப்புகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அத்தோடு அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் அந்தக் குறிப்புகளை நகல் (Photosted) எடுக்க அனுமதி கேட்டால், அனுமதிகக்க் கூடாது. அப்படி அனுமதித்தால், அந்தக் குறிப்புகளைத் தங்கள் புத்தகங்களில் ஒட்டி வைத்துக் கொண்டு, பாட நேரத்தில் குறிப்பெழுத மாட்டார்கள். அவர்கள் குறிப்பெழுத வில்லை என்றால், மற்ற தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அப்போது வகுப்பைக் கட்டுப்படுத்த நமக்கு சிரம்ம் ஏற்படும். அத்தோடு, நகல் எடுத்து ஒட்டுகிறவர்கள் மனதில், குறிப்புகள் எதுவும் பதியாது.

ஆசிரியர்கள் எப்போதும் ஒரு பரந்த வட்டத்தில் (Wider Circle) சிந்திக்க வேண்டும் என்பதைக் கடந்த காலப் பதிவுகளில் வலியுறுத்தி வந்திருக்கிறேன். நான் மேலே எழுதிய நிலைமையிலும் பரந்த வட்டத்தில் சிந்திக்கத் தவறினால், என்ன நிலைமை ஏற்படும் என்பதைப் பின்வரும் அனுபவத்தின் மூலம் எழுதுகிறேன்.

நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த பக்கத்து வகுப்பில், ஒரு மலாய் பெண் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த வகுப்பின் தராதரமும் ஏறக்குறைய என் வகுப்பைப் போன்றதே. அந்த ஆசிரியர் நிறை மாதக் கர்ப்பிணி. மனசாட்சியோடு பாடம் நடத்த முயல்கிறார். அவரும் என்னைப் போன்று மாணவர்களுக்குக் குறிப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்.

முன்னாள் உள்ள எழுது பலகையில் (White Board) குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் எழுது பலகையைப் பார்த்து எழுதுவதால், தனக்குப் பின்னால் உள்ள மாணவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. நான்கு மாணவர்கள் அவருடைய குறிப்புகளை அக்கறையோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற 36 மாணவர்கள் தங்கள் குறும்புத் தனத்தை அறங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கும்பலாக உட்கார்ந்து கதையடித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலர் பின் வாசல் வழியாக வெளியேறி காணாமல் போகின்றனர். இன்னும் கொஞ்சம் பேர் கையில் கிடைத்த ஏதாவது ஒன்றை பந்தாகக் கருதி உதைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பின்னடைவு நிறைந்த ஆண் மாணவர்களைக் கொண்ட இடைநிலைப் பள்ளி மாணவர்களை ஒரு கர்ப்பணிப் பெண் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எவ்வளவு சிரமம் என்று சிந்தித்துப் பாருங்கள். NO One Plans To Fail But Everyone Fail To Plan என்ற ஆங்கிலப் பொன் மொழியைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இந்த நிதர்சனத்தைத்தான் இந்த கர்ப்பணி ஆசிரியை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். வருட ஆரம்பத்திலேயே தான் கர்ப்பணி நிலைமையை அடைந்து விட்டதை அந்த ஆசிரியை உணர்ந்திருக்க வேண்டும். எந்த பாடம், எந்த வகுப்பு என்ற காரியங்களை விடுமுறையிலேயே பள்ளி நிர்வாகம் நிர்ணயித்து ஆசிரியர்கள் கையில் ஒப்படைத்து விடும். இந்த ஆசிரியர், தன் பிரசவ காலம் நெறுங்கும் போது எவ்வளவு சிரமப்பட நேரிடும் என்பதை முன்யோசனையாக அறிந்திருக்க வேண்டும். தன் சிரமத்தைக் குறைப்பதற்கு என்ன ஆயத்தங்கள் செய்திருக்க வேண்டும் என்பதையும் திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால், தவறி விட்டார், பரிதாபம்!

இந்த நிலைமை என் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. இந்த ஃபேஸ்புக் குழுவிற்கு வந்து செல்லும் ஆசிரியர்களுக்கும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்கிறார்கள். ஒரு ஆசிரியர், விடுமுறையில் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல வேண்டும் என்கிறார். இன்னொரு ஆசிரியர், தனக்கு அதிகமான வேலை என்கிறார். பல்கலைக் கழகப் படிப்பைத் தொடர்வதால், வீட்டில் உள்ள பிள்ளைகளுக் உணவு சமைக்க மறப்பதில்லையே? உண்ணல், உடுத்தல், உறங்கல் போன்ற நடவடிக்கைகளை மறப்பதில்லையே? ஏன், தங்கள் வேலையை எளிது படுத்தும் திட்டமிடும் பணியை மட்டும் மறக்கிறோம்? சிந்தித்துத் திட்டமிடுவது அப்படியென்ன சிரமமான காரியமா? படுத்துக் கொண்டே திட்டமிடலாம்…… குளியலையில் கூட திட்டமிடலாம். அதற்கு நேர காலம் தேவையில்லை. ‘இந்த வேலையை எப்படி எளிது படுத்துவது?’ என்று சிந்தித்தாலே, நமது எதிர்காலக் கடமைகளின் சுமைகளை 20 விழுக்காடு குறைத்து விடலாம்.

நான் குறிப்புகளைப் பிரதி எடுத்து மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் இன்னொரு நன்மையும் இருக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்களின் புத்தகங்களைத் திருத்த வேண்டுமல்லவா? பெரும்பாலான ஆசிரியர்கள் என்ன செய்வார்கள்? எல்லா நோட்டு புத்தகங்களையும் ஆசிரியர் அறைக்குச் சுமந்து வந்து, ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் திருத்திக் கொண்டிருப்பர்கள். வேறு சிலர் அதையும் தாண்டி, தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று திருத்திக் கொண்டிருப்பார்கள். நான் இப்படியெல்லாம் செய்வது கிடையாது. மாணவர்கள் தங்கள் எழுத்து வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதே, ஆசிரியர் மேசையில் அமர்ந்து கொண்டு, பெயர்ப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் அழைத்து, அவர்களின் வேலைகளைத் திருத்தி விடுவேன். ஆசிரியர் அறைக்கும் வீட்டுக்கும் கொண்டு செல்லும் பழக்கமே கிடையாது. (இப்படியெல்லாம் சுமைகளை இறக்கி வைப்பதால்தான், மணிக் கணக்காக ஃபேஸ்புக் நண்பர்களுக்கு புத்திமதி சொல்லிக் கொண்டிருக்கிறேன், போங்க…… )

இவ்விடம் உங்கள் மனதில் ஒரு கேள்வி தோன்றியிருக்க வேண்டுமே?

இந்த சார், ஏன் பக்கத்து வகுப்பை எட்டிப் பார்க்க வேண்டும்? Sibuk sangat! Jaga tepi kain orang lain! – இப்படியெல்லாம் சிந்திக்கிறீர்களா?

ஆமாம். எனது கோளாரே அதுதான். அதனால்தான் பலரிடம் கெட்ட பெயரையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். ‘தன்னைத் தானே பீத்திக் கொள்கிறர்’, Angkat bakul sendiri, என்றெல்லாம் என்னைப் பலர் வர்ணித்திருக்கிறார்கள்.

எனது போதிக்கும் சுமையை நான் குறைத்து விட்டதால், வெளியே சுற்றித் திரிகிற (Ponteng) மாணவர்களையும் கவனிக்க முடிந்தது. ஆசிரியர் தங்களைக் கவனிக்கிறார் என்பதை உணர்ந்த குறும்புக் கார மாணவர்கள் பலர் குடுகுடுவென்று வகுப்புக்கு ஓடி ஒளிந்து கொண்டனர். இன்னும் துணிச்சலான மாணவர்கள், ‘இந்த ஆசிரியரால் என்ன செய்ய முடியும்’ என்ற துணிச்சல் வேறு. உடனே என் பாக்கெட்டில் உள்ள செல் பேசியை எடுத்துப் படம் பிடிப்பது போல் ஒரு பாசாங்குதான். வாலை நீட்டிக் கொண்டிருந்த எஞ்சிய மாணவர்களும் ஓடி வகுப்புக்குள் ஒளிந்து கொள்வார்கள்.

சரி, கர்பணிகளுக்குப் பரிவு காட்டுவது நமது கடமையல்லவா? இந்த ஆசிரியர் திட்டமிடத் தவறியதால், தண்டனையைத் தன்னந் தனியாக சுமக்கச் செய்யலாமா? அதுவும், பக்கத்து வகுப்பில் அவர்களுடைய குறும்புத் தனங்களால், என் வகுப்பும் பாதிக்கிறது அல்லவா? எனவே, அவ்வப்போது எட்டி, எட்டி பார்த்துக் கொண்டேன். நான் பார்க்கிற நேரமெல்லாம் அந்த ஆசிரியர் எழுது பலகையில் குறிப்பு எழுதுவதிலேயே மும்முரமாக இருந்தார். நானோ அவ்வப்போது எட்டிப் பார்த்ததால், பின்னால் உட்கார்ந்து கொண்டு குறும்பு செய்து கொண்டிருந்த மாணவர்களையாவது கட்டுப்படுத்த முடிந்த்து. அந்த ஆசிரியருக்குத் தெரியாமலேயே அவருடைய கடமையை நான் செய்து கொண்டிருந்தேன். அத்தோடு, வேறு வகுப்பில் இருந்து சுற்றித் திரிகின்ற மாணவர்களையும் விரட்டியடித்தேன்.


இப்போது, நாடு முழுவதிலுமுள்ள என் சக ஆசிரியர்கள் பயனடைய வேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறேன். குறைந்தது, பயிற்சியில் உள்ள ஆசிரியர்கள் இதனை வாசித்துப் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் எனக்கு அனுப்புகிற மின்னஞ்சல் எனக்கு எப்போதும் ஊக்கத்தைக் கொடுக்கிறது. தொழிலில் பல ‘ஏமாற்று வித்தைகளைச்’ செய்து கொண்டிருந்தாலும், முகம் தெரியாத ஆசிரியர்கள் பயனடைகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. அவர்களில் வாழ்த்துச் சொற்கள் அதைவிட பெருமிதத்தைத் தருகிறது.