Monday, June 17, 2013

திட்டமிடத் தவறுவதால் ஆசிரியர்கள் சந்திக்கின்ற பாடுகள்!


This article is to explain the suffering of teachers faced because of their failure in planning. I always give priority to write in my own language, Tamil.

இன்று நான் ஒரு பின்தங்கிய 2ம் படிவ வகுப்பில் நன்னெறி பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். 3 அல்லது 4 மாணவர்களைத் தவிர மற்றவர்களைக் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவது சிரமமான காரியம். பெரும்பாலும் வகுப்பில் உட்கார்ந்து கொண்டு கதை பேசுவர்; இன்னும் சிலர் ஆசிரியர் வகுப்பில் இருக்கும் போதே காணாமல் போய் விடுவர்; இன்னொரு கூட்டமோ ஏதாவது குறும்புத் தனமாக விளையாடிக் கொண்டிருப்பர்.

இப்படிப்பட்ட நிலைமையில் ஓர் ஆசிரியர் நேர்மையான முறையில் பாடம் நடத்த வேண்டும் என்றால், இயலாத காரியம் என்று இதனை வாசிக்கிற அனைவரின் மனசாட்சியும் சொல்லும். அதற்கென்று வகுப்பில் சும்மா உட்கார்ந்து கொண்டு எப்படியாவது போகட்டும் என்று விட்டு விடவும் முடியாது. நீண்ட காலமாக இந்தப் பிரச்சனையைப் பார்த்துக் கொண்டிருப்பதால், ஒரு தீர்வையும் கடந்தாண்டே தீர்மானித்து விட்டேன்.

ஏறக்குறைய நான் தொழிலில் ஓய்வு பெறும் வரைக்கும் இந்தப் பாடத்தைப் போதிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு வாரமும் குறைந்த்து இரண்டு வகுப்புகளுக்குப் போதனை நடத்த வேண்டும். நன்னெறி பாடத்தில் மாணவர்களுக்குக் குறிப்பு வழங்குவது, பயிற்சி வழங்குவது, PBS மதிப்பீடு செய்வது என்பது ஒவ்வொரு வகுப்புக்கும், ஒவ்வொரு ஆண்டும் தொடர் நடவடிக்கையாகும்.

நன்னெறி பாடத்திற்கு ஆண்டு தோறும் ஒரே மாதிரியான குறிப்பைதான் மாணவர்களுக்கு வழங்குகிறோம். அத்தோடு, ஒரு வகுப்புக்கு வழங்குகிற குறிப்பையே அடுத்த வகுப்புக்கும் வழங்க வேண்டும். எனவே, குறிப்புகளைக் கடந்தாண்டே தயாரித்து வைத்துக் கொண்டேன். (எனது குறிப்புகளை http://www.wargasivik.blogspot.com/ என்ற வலைப்பூவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்). சுமார் 15 பக்கங்களில் அந்தக் குறிப்புகள் அடங்கியிருக்கும். விடுமுறையிலேயே அதனை டைப் செய்து கொண்டேன். (விடுமுறையில் enjoy பண்ண வேண்டும் என்று நினைத்தால், ஆண்டு முழுவதும் திண்டாட்டம்தான்). அந்தப் 15 பக்கங்களையும் 50 நகல்கள் எடுத்துக் கொண்டு கோர்த்துக் (Binding) கொண்டேன். ஒவ்வொரு முறையும் மாணவர்களுக்குக் குறிப்பு கொடுக்க வேண்டிய தினங்களில் அவற்றை மாணவர்களிடத்தில் ஒப்படைத்து, எழுதச் சொலவேன். எழுது பலகையில் எழுத வேண்டிய அப்பியாசம் இல்லாததால், மாணவர்களை முழுமையாகக் கண்காணிக்க முடியும். மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடா விட்டாலும் பரவாயில்லை. ஆனால், சத்தம் போடுதல், சண்டையிடுதல், விளையாடுதல், வகுப்பில் இருந்து காணாமல் போகுதல் போன்ற தகாத காரியங்களைத் தடுப்பதற்கு வாய்ப்பு இருக்கும்.

நமது பாடம் அந்த வகுப்பில் முடிந்தவுடன் மாணவர்கள் கையில் உள்ள தாளை திரும்ப வாங்க மறக்க கூடாது. ஏனென்றால் அதனை நாம் மற்ற வகுப்புகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அத்தோடு அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் அந்தக் குறிப்புகளை நகல் (Photosted) எடுக்க அனுமதி கேட்டால், அனுமதிகக்க் கூடாது. அப்படி அனுமதித்தால், அந்தக் குறிப்புகளைத் தங்கள் புத்தகங்களில் ஒட்டி வைத்துக் கொண்டு, பாட நேரத்தில் குறிப்பெழுத மாட்டார்கள். அவர்கள் குறிப்பெழுத வில்லை என்றால், மற்ற தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அப்போது வகுப்பைக் கட்டுப்படுத்த நமக்கு சிரம்ம் ஏற்படும். அத்தோடு, நகல் எடுத்து ஒட்டுகிறவர்கள் மனதில், குறிப்புகள் எதுவும் பதியாது.

ஆசிரியர்கள் எப்போதும் ஒரு பரந்த வட்டத்தில் (Wider Circle) சிந்திக்க வேண்டும் என்பதைக் கடந்த காலப் பதிவுகளில் வலியுறுத்தி வந்திருக்கிறேன். நான் மேலே எழுதிய நிலைமையிலும் பரந்த வட்டத்தில் சிந்திக்கத் தவறினால், என்ன நிலைமை ஏற்படும் என்பதைப் பின்வரும் அனுபவத்தின் மூலம் எழுதுகிறேன்.

நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த பக்கத்து வகுப்பில், ஒரு மலாய் பெண் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த வகுப்பின் தராதரமும் ஏறக்குறைய என் வகுப்பைப் போன்றதே. அந்த ஆசிரியர் நிறை மாதக் கர்ப்பிணி. மனசாட்சியோடு பாடம் நடத்த முயல்கிறார். அவரும் என்னைப் போன்று மாணவர்களுக்குக் குறிப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்.

முன்னாள் உள்ள எழுது பலகையில் (White Board) குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் எழுது பலகையைப் பார்த்து எழுதுவதால், தனக்குப் பின்னால் உள்ள மாணவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. நான்கு மாணவர்கள் அவருடைய குறிப்புகளை அக்கறையோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற 36 மாணவர்கள் தங்கள் குறும்புத் தனத்தை அறங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கும்பலாக உட்கார்ந்து கதையடித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலர் பின் வாசல் வழியாக வெளியேறி காணாமல் போகின்றனர். இன்னும் கொஞ்சம் பேர் கையில் கிடைத்த ஏதாவது ஒன்றை பந்தாகக் கருதி உதைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பின்னடைவு நிறைந்த ஆண் மாணவர்களைக் கொண்ட இடைநிலைப் பள்ளி மாணவர்களை ஒரு கர்ப்பணிப் பெண் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எவ்வளவு சிரமம் என்று சிந்தித்துப் பாருங்கள். NO One Plans To Fail But Everyone Fail To Plan என்ற ஆங்கிலப் பொன் மொழியைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இந்த நிதர்சனத்தைத்தான் இந்த கர்ப்பணி ஆசிரியை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். வருட ஆரம்பத்திலேயே தான் கர்ப்பணி நிலைமையை அடைந்து விட்டதை அந்த ஆசிரியை உணர்ந்திருக்க வேண்டும். எந்த பாடம், எந்த வகுப்பு என்ற காரியங்களை விடுமுறையிலேயே பள்ளி நிர்வாகம் நிர்ணயித்து ஆசிரியர்கள் கையில் ஒப்படைத்து விடும். இந்த ஆசிரியர், தன் பிரசவ காலம் நெறுங்கும் போது எவ்வளவு சிரமப்பட நேரிடும் என்பதை முன்யோசனையாக அறிந்திருக்க வேண்டும். தன் சிரமத்தைக் குறைப்பதற்கு என்ன ஆயத்தங்கள் செய்திருக்க வேண்டும் என்பதையும் திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால், தவறி விட்டார், பரிதாபம்!

இந்த நிலைமை என் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. இந்த ஃபேஸ்புக் குழுவிற்கு வந்து செல்லும் ஆசிரியர்களுக்கும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்கிறார்கள். ஒரு ஆசிரியர், விடுமுறையில் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல வேண்டும் என்கிறார். இன்னொரு ஆசிரியர், தனக்கு அதிகமான வேலை என்கிறார். பல்கலைக் கழகப் படிப்பைத் தொடர்வதால், வீட்டில் உள்ள பிள்ளைகளுக் உணவு சமைக்க மறப்பதில்லையே? உண்ணல், உடுத்தல், உறங்கல் போன்ற நடவடிக்கைகளை மறப்பதில்லையே? ஏன், தங்கள் வேலையை எளிது படுத்தும் திட்டமிடும் பணியை மட்டும் மறக்கிறோம்? சிந்தித்துத் திட்டமிடுவது அப்படியென்ன சிரமமான காரியமா? படுத்துக் கொண்டே திட்டமிடலாம்…… குளியலையில் கூட திட்டமிடலாம். அதற்கு நேர காலம் தேவையில்லை. ‘இந்த வேலையை எப்படி எளிது படுத்துவது?’ என்று சிந்தித்தாலே, நமது எதிர்காலக் கடமைகளின் சுமைகளை 20 விழுக்காடு குறைத்து விடலாம்.

நான் குறிப்புகளைப் பிரதி எடுத்து மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் இன்னொரு நன்மையும் இருக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்களின் புத்தகங்களைத் திருத்த வேண்டுமல்லவா? பெரும்பாலான ஆசிரியர்கள் என்ன செய்வார்கள்? எல்லா நோட்டு புத்தகங்களையும் ஆசிரியர் அறைக்குச் சுமந்து வந்து, ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் திருத்திக் கொண்டிருப்பர்கள். வேறு சிலர் அதையும் தாண்டி, தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று திருத்திக் கொண்டிருப்பார்கள். நான் இப்படியெல்லாம் செய்வது கிடையாது. மாணவர்கள் தங்கள் எழுத்து வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதே, ஆசிரியர் மேசையில் அமர்ந்து கொண்டு, பெயர்ப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் அழைத்து, அவர்களின் வேலைகளைத் திருத்தி விடுவேன். ஆசிரியர் அறைக்கும் வீட்டுக்கும் கொண்டு செல்லும் பழக்கமே கிடையாது. (இப்படியெல்லாம் சுமைகளை இறக்கி வைப்பதால்தான், மணிக் கணக்காக ஃபேஸ்புக் நண்பர்களுக்கு புத்திமதி சொல்லிக் கொண்டிருக்கிறேன், போங்க…… )

இவ்விடம் உங்கள் மனதில் ஒரு கேள்வி தோன்றியிருக்க வேண்டுமே?

இந்த சார், ஏன் பக்கத்து வகுப்பை எட்டிப் பார்க்க வேண்டும்? Sibuk sangat! Jaga tepi kain orang lain! – இப்படியெல்லாம் சிந்திக்கிறீர்களா?

ஆமாம். எனது கோளாரே அதுதான். அதனால்தான் பலரிடம் கெட்ட பெயரையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். ‘தன்னைத் தானே பீத்திக் கொள்கிறர்’, Angkat bakul sendiri, என்றெல்லாம் என்னைப் பலர் வர்ணித்திருக்கிறார்கள்.

எனது போதிக்கும் சுமையை நான் குறைத்து விட்டதால், வெளியே சுற்றித் திரிகிற (Ponteng) மாணவர்களையும் கவனிக்க முடிந்தது. ஆசிரியர் தங்களைக் கவனிக்கிறார் என்பதை உணர்ந்த குறும்புக் கார மாணவர்கள் பலர் குடுகுடுவென்று வகுப்புக்கு ஓடி ஒளிந்து கொண்டனர். இன்னும் துணிச்சலான மாணவர்கள், ‘இந்த ஆசிரியரால் என்ன செய்ய முடியும்’ என்ற துணிச்சல் வேறு. உடனே என் பாக்கெட்டில் உள்ள செல் பேசியை எடுத்துப் படம் பிடிப்பது போல் ஒரு பாசாங்குதான். வாலை நீட்டிக் கொண்டிருந்த எஞ்சிய மாணவர்களும் ஓடி வகுப்புக்குள் ஒளிந்து கொள்வார்கள்.

சரி, கர்பணிகளுக்குப் பரிவு காட்டுவது நமது கடமையல்லவா? இந்த ஆசிரியர் திட்டமிடத் தவறியதால், தண்டனையைத் தன்னந் தனியாக சுமக்கச் செய்யலாமா? அதுவும், பக்கத்து வகுப்பில் அவர்களுடைய குறும்புத் தனங்களால், என் வகுப்பும் பாதிக்கிறது அல்லவா? எனவே, அவ்வப்போது எட்டி, எட்டி பார்த்துக் கொண்டேன். நான் பார்க்கிற நேரமெல்லாம் அந்த ஆசிரியர் எழுது பலகையில் குறிப்பு எழுதுவதிலேயே மும்முரமாக இருந்தார். நானோ அவ்வப்போது எட்டிப் பார்த்ததால், பின்னால் உட்கார்ந்து கொண்டு குறும்பு செய்து கொண்டிருந்த மாணவர்களையாவது கட்டுப்படுத்த முடிந்த்து. அந்த ஆசிரியருக்குத் தெரியாமலேயே அவருடைய கடமையை நான் செய்து கொண்டிருந்தேன். அத்தோடு, வேறு வகுப்பில் இருந்து சுற்றித் திரிகின்ற மாணவர்களையும் விரட்டியடித்தேன்.


இப்போது, நாடு முழுவதிலுமுள்ள என் சக ஆசிரியர்கள் பயனடைய வேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறேன். குறைந்தது, பயிற்சியில் உள்ள ஆசிரியர்கள் இதனை வாசித்துப் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் எனக்கு அனுப்புகிற மின்னஞ்சல் எனக்கு எப்போதும் ஊக்கத்தைக் கொடுக்கிறது. தொழிலில் பல ‘ஏமாற்று வித்தைகளைச்’ செய்து கொண்டிருந்தாலும், முகம் தெரியாத ஆசிரியர்கள் பயனடைகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. அவர்களில் வாழ்த்துச் சொற்கள் அதைவிட பெருமிதத்தைத் தருகிறது.

Friday, November 23, 2012

மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் எதிர்நோக்கும் சவால்கள்


படைப்பு - திரு. ஆ.திருவேங்கடம் (ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்)
எனது ஆய்வுக் கொள்கை
அஞ்சாமல் ஆய்வு செய்தல். செய்ததை நடுநிலை தவறாமல் எழுதுதல்; பேசுதல். மொழி, குமுகாயம், நாடு, மக்கள் என எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் ஆங்கே ஆளும் அரசின் பங்கு எல்லா நிலையிலும் இருப்பது தெளிவாகும். ஆக, குறைகளுக்கும் நிறைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய நிகல்கால அரசை (government of the day) போற்றியும், குறை சொல்லியும் என் எழுத்துக்களும் பேச்சுக்களும் அமையும்.
உயர்கல்வி அமைச்சின் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா, டிசம்பர் 2011இல், ஒரு தேசிய ஒற்றுமைக் கருத்தரங்கில் ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு இன்றைய எனது உரை அமையும். துணை அமைச்சர் ஆற்றிய உரை பின்வருமாறு :
“Don’t sugar-coat views. Stop the apple polishing,” Saifuddin tells academics.
- “I hope you all can forward your suggestions without fear or favour. It might be painful for the government to swallow, but we will not scold,” he said jokingly. “We are in an era of new politics. Don’t worry about who will win in the general election. For me, it is about the rakyat.”
Academics have been told to stop apple polishing  ministers and top government officials as it would do more harm than good.
“Some of them are quick not to allow opposition politics but make an exception when it comes to the ruling party,” he said.1

லிம் லியான் கியோக்- தாய்மொழிக் கல்வியை
நிலை நிறுத்தியவர்

(அ) பார்ன்ஸ் அறிக்கைக்கு எதிர்ப்பு
1951 பார்ன்ஸ் கல்வி அறிக்கை தமிழ், சீனப் பள்ளிகளை கட்டங் கட்டமாக இழுத்து மூட பரிந்துரை செய்தது. கோலாலம்பூர் சீன ஆசிரியர்கள் சங்கத்தின் (KLCSTA Kuala Lumpur Chinese School Teachers’ Association) தலைவரான லிம் லியான் கியோக் ஆங்கிலேயர்களின் இம்முடிவை கடுமையாக எதிர்த்தார். ஜூலை 1951ஆம் ஆண்டு  ‘PAN-Malayan Chinese Teachers Meeting’ என்று அழைக்கப்பட்ட கூட்டத்தை, சீன கல்விமான்கள் லிம் லியான் கியோக் தலைமையில் நடத்தினர். இதன் விளைவால் இன்று Jiao Zong என்று அழைக்கப்படும் UCSTA – United Chinese Schools Teachers’ Association of Malaya அமைக்கப்பட்டது (அன்று UCSTA, இன்று UCSTAM). Fenn-Wu Report 1951 மூலம் Barnes Report 1951ஐ சீனர்கள் எதிர்த்தனர். 2

(ஆ) மலாக்கா புரிந்துணர்வு கூட்டமும் ரசாக் கல்வி அறிக்கையும்
நாட்டின் முதல் பொதுத் தேர்தல், நாடு விடுதலை அடையும் முன்பு 1955இல் நடந்தது. 1951 பார்ன்ஸ் கல்வி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, 1952 Education Ordinance நடைமுறைக்கு வந்திருந்த நேரம் அது. சீனர்களின் கடுமையான எதிர்ப்பு, துங்கு அப்துல் ரகுமானின் தலைமையிலான கூட்டணியின் (Alliance) தேர்தல் வெற்றியை பாதிக்கும் அபாயம் இருந்தது. தேர்தலில் கூட்டணி வெற்றி குறைந்தால், ஆங்கிலேயர் நம்பிக்கையுடன் கூட்டணி தலைவர்களுடன் விடுதலைப் பேச்சு வார்த்தை நடத்தும் செயல் பாதிப்படையும். இந்த இக்கட்டான நிலையில், வேறு வழி இல்லாமல் துங்கு, லிம் லியான் கியோக்கை சந்திக்க இணங்கினார். அன்றைய மசீச தலைவர் தான் செங் லோக் மலாக்கா இல்லத்தில் 12-1-1955 தேதியன்று லிம் லியான் கியோக், துங்கு அப்துல் ரகுமான் சந்திப்பு நடந்தது.
ஆங்கிலேயர்கள் சீனப் பள்ளிகளுக்கு சீனப்பள்ளி பரிசோதகர்களை நியமித்து, 1954 கல்வி வெள்ளை அறிக்கையை நடைமுறைப்படுத்த கட்டாய ‘Stick and Carrot’ முறையைக் கடைபிடித்தனர். ஆங்கிலேய அரசின் கெடுபிடிகளுக்கு இணங்கிப் போக வேண்டாமென மசீச தலைவர் தான் செங் லோக் பள்ளி நிர்வாகிகளையும், ஆசிரியர்களையும் வெளிப்படையாக கேட்டுக் கொண்டார். லிம் லியான் கியோக் ‘delaying tactic’ஐப் பயன்படுத்தினார். அது ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.
அந்தச் சந்திப்பை Maliujia Huitan (Malacca Meeting) என்பார்கள். இந்தச் சந்திப்பில் லிம் லியான் கியோக் ஒரு தவறு செய்து விட்டார். நாட்டிற்கு சீனம், மலாய், ஆங்கிலம், தமிழ் ஆகிய 4 மொழிகளும் தேசிய மொழிகள் என இவர் இந்தச் சந்திப்புக்கு முன்பு வரை போராடி வந்தார்.
சீன, தமிழ்ப்பள்ளிகளை நிலை நிறுத்தும் கோரிக்கையை ஏற்கச் செய்யும் வகையில், துங்குவை பார்னஸ் கல்வி அறிக்கை 1951ஐ கைவிட சம்மதிக்க வைக்கும் நோக்கில் லிம் போராடினார். மேற்குறிப்பிட்ட 4 மொழிகள் தேசிய மொழிகளாகும் தமது (லிம்) கோரிக்கையை, துங்குவின் பதில் கோரிக்கைக்கு  ஏற்ப, ‘தேர்தலுக்கு முன்புவிட்டுக் கொடுத்தார். இந்த வாய்மூல புரிந்துணர்வு சம்மதம்நாட்டில் இன்று நாம் எதிர்கொள்ளும், கல்வி, மொழி நிலைகளுக்கு அடித்தளமாக அமைந்தது.
1955 தேர்தலில் 52இல் 51 தொகுதிகளில் துங்குவின் கூட்டணி வென்றது.  அவர் கொடுத்த வாய்மொழிஇணக்கத்தின்படி, Dato Abdul Razak  தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினருடன், ஆகஸ்ட் 1955இல் கல்வி மறு ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நேரத்தில் மசீச தலைமைத்துவம் மாறியிருந்தது. 1970, 1980களில் கெராக்கான் கட்சியின் தலைவராகவும் பினாங்கின் முதலமைச்சராகவும் பதவி வகித்த லிம் சோங் யு, மார்ச் 1958இல் மசீச தலைவராக பொறுப்பேற்றிருந்தார். லிம் லியான் கியோக்கிடம் துங்கு கொடுத்திருந்த வாக்குறுதியை லிம் சோங் யு ரசாக் கல்விக் குழுவின் இணக்கத்திற்கு முன் வைத்தார். அதன் வழி, ஆங்கில, மலாய், சீன, தமிழ்ப்பள்ளிகள் நிலை நிறுத்தப்பட்டன. இருப்பினும் ரசாக் கல்வி அறிக்கையின் ஆரம்ப நகல், காலப் போக்கில் ஒரே மொழிப் பள்ளியைக் கொண்டு வரும் இறுதி இலக்கைக் (Ultimate Objective) கொண்டிருந்தது. 3

(இ) குடியுரிமை பறிக்கப்பட்டது
Rahman Talib Report 1960, அதன் விளைவாக உருவான Education Act 1961 இடைநிலைப்பள்ளிகளில், மலாய் அல்லது ஆங்கிலத்தை கற்பிக்கும் மொழியாக பயன்படுத்துவதை கட்டாய நடைமுறைக்கு கொண்டு வந்தது. லிம் இந்நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தார். தாய்மொழிக்காக போராடிய லிம் அவர்களின் ஆசிரியர் உரிமமும் குடியுரிமையும் 1961இல் பறிக்கப்பட்டன. மூன்றாண்டுகள் சட்டப் போராட்டத்தில் மூழ்கி நீதிமன்ற படிகட்டுகளை ஏறி இறங்கினார். இறுதியில் நவம்பர் 1964இல் லிம் தமது போராட்டத்தில் தோல்வியடைந்தார். 1985இல், நாடற்ற மனிதராக கோலாலம்பூர் துங் சின் மருத்துவமனையில் அவர் காலமானார். 4
லிம் லியாங் கியோக் இறக்கும் பொழுது அவரிடம் சொத்தோ, அரசியல் பலமோ இல்லை. இருப்பினும் சீனக் கல்விக்கு அவர் ஆற்றிய தொண்டின் அடிப்படையில், அன்னாரது புகழுடல் சிலாங்கூர்-கோலாலம்பூர் Assembly மையத்தில் வைக்கப்பட்டது. இன்று வரை கோலாலம்பூர் கண்டிராத அளவிற்கு பல்லாயிரம் பேருடன் அன்னாரது பேருடல் கோலாலம்பூர் ஹாக்கியன் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
லிம் லியான் கியோக் போன்று மொழிக்காகவும் இனத்துக்காகவும் பலர் வாழ்ந்த இந்த நாட்டில், இன்று எப்பேற்பட்ட அரசியல், பொது வாழ்வு சுயநலக்காரர்கள் இருக்கின்றார்கள் என்பதையும், அன்றாடம் தமிழ் தினசரிகளை எவ்வாறு அவர்கள் அலங்கரிக்கின்றார்கள் என்பதையும் ஒப்பிட்டு சிந்தித்துப் பாருங்கள்.
இன்று நம் நாட்டில் தமிழ் இருக்கின்றது. போராடி போராடி நிலைநிறுத்த வேண்டிய நிலையில் தமிழ்க்கல்வி இருக்கின்றது. தமிழுக்கு அடித்தளம் தமிழ்ப்பள்ளிகள் ஆகும். பெரும் மதிப்பிற்குரிய லிம் லியாங் கியோக் அவர்களே தமிழ், சீனப் பள்ளிகளின் காவலர் ஆவார்.
அடுத்து மலேசியாவில் தமிழ்க்கல்வி, அது எதிர்கொள்ளும் நல்ல நிலைகள், சிக்கல்கள், பாதிப்புகள் சார்ந்த சில கூறுகளைப் பற்றி இன்று பேச உள்ளேன்.

(1) LINUS - குழந்தைக் கல்வி
கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு தமிழைக் கற்பிப்பது ஒரு பெரும் சவால் ஆகும். கல்வி சார்ந்த அரசின் NKRAவில் (Education National Key Results Area) LINUS ஓர் அங்கமாகும். LINUS, Literacy and Numeracy Screening என்பதன் சுருக்கமாகும். LINUS 3Rஇல் (Reading, wRiting, eRthmetic) கவனம் செலுத்துகிறது. LINUS திட்ட நடைமுறை தமிழ்ப்பள்ளிகளிலும் உண்டு. அக்டோபர் 2011 வரை 1100 ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான கல்வி மீட்புநிலை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் நிலவரம் தெரியவில்லை. PERDANA வகை மாணவர்கள் 3Rஇல் சிக்கலை எதிர்கொள்ளாதவர்கள். 3Rஇல் பின் தங்கிய மாணவர்கள் LINUS திட்டத்தில் உட்படுத்தப்படுகின்றனர். LINUSசில் தடுமாறும் மாணவர்கள்  TEGAR பிரிவினில் சேர்க்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகின்றனர். முதல் மூன்றே ஆண்டுகளில் LINUS பயிற்று முறையால் மாணவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்வது கல்வி NKRAவின் நோக்கமாகும். 5, 6

(2) உடற் குறையுள்ள மாணவர்கள்
LINUS திட்டம் உடற் குறையுள்ள மாணவர்கள் மீதும் கவனம் செலுத்துகின்றது. இவ்வாறான மாணவர்கள், மருத்துவர்கள் அழைக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றனர். சாதாரண பள்ளியில், LINUS திட்ட உதவியுடனும் பயில முடியாத மாணவர்களை சிறப்புக் கல்விப் பள்ளிகளுக்கு (Pendidikan Khas) அனுப்புவது வழக்கம். இவ்வகை மாணவர்களின் பெற்றோர்கள், தமிழ்ப்பள்ளி நிர்வாகத்துடன் ஒத்துழைப்பது குறைவாக உள்ளது. சிறப்புக் கல்விப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தமிழைப் படிக்கும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர். 7
கோலாலம்பூர் பிளெச்சர் தமிழ்ப்பள்ளியில் உடற் குறையுள்ள மாணவர்களுக்கான பயிற்சி வசதி உண்டு. இருப்பினும் இந்தப் பிரிவின் நிர்வாகத்தை வேற்றினத்தவர் எடுத்துக் கொண்டனர்.

(3) பாலர் பள்ளிகளில் தமிழ்க்கல்வி
(அ) தமிழ் இல்லா பாலர் பள்ளிகள்
நாட்டில் CEC, Smart Readers, Montessori, Q-dees போன்ற பெரிய வாணிப அளவில் நடத்தப்படும் பாலர் பள்ளிகளிலும் நிறைய தமிழ் மாணவர்கள் பயில்கின்றனர். அதிக கட்டணத்தில் தரமான கல்வி என்னும் நடைமுறையை விரும்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கு அனுப்புகின்றனர். தங்கள் பிள்ளைகள் தாய்மொழிக் கல்வியை இழக்கின்றனர் என்று அவர்கள் கவலைப்படுவதில்லை. இவ்வகை பாலர் பள்ளிகளுக்குச் செல்லும் இளம் மாணவர்களில் பெரும் பகுதியினர், தமிழ்ப் பள்ளிகளுக்கு சேர்க்கப்படுவதில்லை.

(ஆ) PGT பாலர் பள்ளிகள்
- தமிழ் உண்டு
தமிழர்கள் நடத்தும் பாலர் பள்ளிகள் அனைத்திலும் தமிழ் கற்பிக்கப்படுகின்றது. தமிழையும் இணைத்து கற்பிக்கும் பாலர் பள்ளி நடத்துநர்கள் முதன் முறையாக 1988இல், Persatuan Guru Tadika Malaysia (PGT) என்னும் தனிச் சங்கம் அமைத்துள்ளனர். PGT உறுப்பினர்கள் நடத்தும் 130 பாலர்  பள்ளிகளில் 224 ஆசிரியர்கள் PGT தயாரித்த தமிழ்க் கல்விச் சாதனங்களையும் பயிற்சி நூல்களையும் பயன்படுத்துகின்றனர். 8

(இ) HPP திட்ட பாலர் பள்ளிகள் - தமிழ் கட்டாயம்
MCEFஇன்  HPP திட்டம் (Harapan Pre-School Programme) நல்ல தமிழ் நூல்களை வழங்குகின்றது. ஆசிரியர்களுக்கான பயிற்சியும் கொடுக்கின்றது. ஓரளவு பண உதவியும் செய்கின்றது. PGTஇன் உறுப்பியம் பெற்ற 130 பள்ளிகளில், 100 பள்ளிகள் HPP திட்டத்தில் பங்கெடுத்து  பயன் அடைகின்றன.

(ஈ) NKRA திட்ட PGT
பாலர் பள்ளிகள்
NKRA திட்டத்தின் வழி கிடைக்கும் ஆண்டுக்கு வெ. 10,000 நிதி உதவி, PGTஇல் அங்கம் பெறும் 10 பள்ளிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

(உ) Tabika Perpaduan பாலர் பள்ளி-தமிழ் வரும் போகும்
2011ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் செயல்படும் 1693 Tabika Perpaduanஇல் (Unity pre-schools) மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழும் மெண்டரினும் போதிக்கப்படும் என தேசிய ஒற்றுமைத் துறை இயக்குநர் Azman Amin Hassan நவம்பர் 2010இல் கூறினார். இவ்விரு மொழிகளின் அடிப்படையை, இங்கு பயிலும் 42,000 மாணவர்களுக்கும் கற்பிக்க தனி மென்பொருள் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். உலு லங்காட், சிலாங்கூர் Tabika Perpaduan முதன் முறையாக தமிழைக் கற்பித்த பெருமையைப் பெறுகின்றது. 9

(ஊ) முறைப்படுத்தப்படாத பாலர் பள்ளிகள் - தமிழ் உண்டு
குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள வீடுகளில் பயிற்சி பெறாத பல பெண்கள் சிறிய அளவில் பாலர் பள்ளிகள் நடத்துகின்றனர். தமிழ் தெரிந்தோர் நடத்தும் இவ்வகை பாலர் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகின்றது.

(4) பாலர் பள்ளி அரசியல்
மலேசிய வரலாற்றில் 2008 தேர்தலுக்கு முன்பு தேசிய முன்னணியின் எந்த மாநில, மைய அரசும் தமிழ் பாலர் பள்ளிகளை அமைத்ததாகவோ, நிதி உதவி செய்ததாகவோ வரலாறு உண்டா? PAS கட்சியின் TASKI பாலர் பள்ளிகளுக்கு போட்டியாக, தேசிய முன்னணியின் TADIKA மேம்படுத்தப்பட்டு வந்த நேரத்தில், ஓரிரு தமிழ்ப் பள்ளிகள் பாலர் பள்ளிகளை நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்என்னும் அடிப்படையில் பெற்றன. CHILD, MCEF நிறுவனங்கள் மட்டுமே பாலர் பள்ளிகளை அமைத்தும், பகுதி பராமரிப்பு உதவிகள் செய்தும் வந்தன. ஆட்சி மாற்றங்களுக்குப் பிறகு பக்காத்தான் ஆளும் மாநிலங்களில் CHILD அமைப்பு உதவியுடன் ஆங்காங்கே புதிய பாலர் பள்ளிகள் அமைக்கப்பட்டன. இந்நடவடிக்கையைப் பின்பற்றி தேசிய முன்னணி மைய அரசும் சில தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளிகளை அமைக்க உதவியது. இப்பொழுது அந்த வேகச் சூடு தணிந்து விட்டது. பக்கத்தான் தன் பணியைத் தொடர்கின்றது.
பாலர் பள்ளி நடத்துநர்களை குமுகாயம் சரியாகக் கண்டு கொள்ளவில்லை என்பது உண்மை. நல்ல வேளை CHILD, MCEF நிறுவனங்கள் கை கொடுக்கின்றன. தமிழ் பாலர் பள்ளியில் நாம் அதிகம் கவனம் செலுத்தினால், தமிழ்ப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழ்க்கல்வி உயரும்.

(5) அடையாள ஆவணங்கள் இல்லை
- தமிழ்க்கல்வி பாதிப்பு
நமது குமுகாயத்தில் சமூக குறைபாடுகள் அதிகம். பிரிந்து போன குடும்பங்களாலும், பலவித சமூக சீர்கேடுகளாலும் அடையாள ஆவணங்கள் இல்லாத குழந்தைகளும், மாணவர்களும் நிறைய பேர் உள்ளனர். 2011இல் சிரம்பானுக்கு அருகில் உள்ள லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறுவர் அடையாள ஆவணங்கள் இல்லாததால் பள்ளி வாசல் கதவறுகே நிறுத்தப்பட்டனர். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிரேசி சொன்னது விந்தையாக இருந்தது.
Approached by The Star, headmistress, A.Gracy said the action was due to a directive from the State Education Department that school heads who allowed such pupils in their schools would be fined RM1000 for each pupil, which must be paid out of their own pockets. 10
இந்தச் சூழ்நிலை தமிழ்ப்பள்ளிகளில் கற்றல், கற்பித்தலைப் பாதிக்கின்றது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்கவும், தேர்வு எழுதவும் என்ன விதிமுறைகள் உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. கல்வி அமைச்சின் அதிகாரிகளோ, துணை அமைச்சர்களோ, அமைச்சரோ இது பற்றி ஏதும் தெளிவாக பேசாத நிலையில், அமைச்சரவையின் இந்திய விவகார சிறப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் என். சிவசுப்பிரமணியம், தம்மிடம் எந்த ஆணை அதிகாரமும் இல்லாத நிலையிலும் அடிக்கடி சுயமாக பள்ளி நிர்வாகங்களுக்கு கட்டளை ஆலோசனைஇதுவென அறிக்கைச் செய்திகளை தமிழ் தினசரிகளில் போட்டு மகிழ்ந்து கொள்வார். 11, 12

(6) தமிழ்ப்பள்ளிகளில் மோசமான கட்டட நிலை
கடந்த 54 ஆண்டுகளாக பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளின் கட்டட, புற வசதிகள் அரசின் பாரபட்ச ஆட்சி நிலையால் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றன. அண்மைய ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளுக்கு 100 மில்லியன், 200 மில்லியன், 300 மில்லியன் அளவுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதாக அரசியல் தலைவர்கள் பத்திரிகைகளில் செய்திகள் போட்டுக் கொள்கின்றனர். அண்மைய காலத்தில் பக்கம் பக்கமாக நாடு முழுதும் உள்ள சில தமிழ்ப்பள்ளிகளின் பெயர்களை பட்டியலிட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கப்பட்ட நிதியளவையும் (ஒரு மில்லியன், மூன்று மில்லியன் என்றெல்லாம்) குறிப்பிடுகின்றனர். பெரும்பாலும் இச்செய்திகளில் உண்மையில்லை. பத்திரிகைகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களைக் கேட்டுப் பாருங்களேன்; உண்மை தெரியும். தமிழ்ப் பள்ளிகளின் மோசமான புற நிலைகளைப் பற்றி தமிழ் தினசரிகளில் வந்த சில செய்திகளை பட்டியல் 1இல் காணலாம்.



தேதி
பள்ளி
பத்திரிகை
செய்தி
29.07.2009
SRJK Ldg. Singai Salak, PD
N26, Star
Shoplot School Shocker – 120 pupil cramed in two double-story premises.
19-8-2011
சிலிம் ரிவர் தமிழ்ப் பள்ளி
பக்கம் 1, ஓசை
இதுதான்பந்துவான் பெனோ பள்ளியா’ – விடிவு பிறக்குமா? தலைமை ஆசிரியர் சாந்தி கேட்கிறார்.
16-2-2012
செர்டாங் தமிழ்ப் பள்ளி
பக்1, நண்பன்
கூரை சரிந்த்து – 40 மாணவர்கள தப்பினர்.
28-2-2012
கோத்தா திங்கி, ஜாலான் தாஜோல் தமிழ்ப்பள்ளி (அரசு முழு உதவி பெறும் பள்ளி)

பக்1, நண்பன்
 எதுவுமே இல்லைவிஞ்ஞானக் கூடம் இல்லைகணினி வகுப்பு இல்லை, திடல் இல்லை, நூல் நிலையம் இல்லை, ஆசிரியர் அறை இல்லை, கோப்புகள் வைக்க இடமில்லை
1-3-2012
காப்பார் வலம்புரோசா தமிழ்ப்பள்ளி
பக்9, ஓசை
பாதை இல்லை, திடல் இல்லை, வேலி இல்லை, - பெற்றோர் மனக் குமுறல்
1-3-2012
ஆர்ஆர்ஆர்ஐ தமிழ்ப் பள்ளி, சுங்கை பூலோ

பிரச்சனை ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல, கூரைகள் பறந்தன, வெள்ளத்தால் சேதம்.
5-7-2012

பினாங்கு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி
N26. Star
Tamil school in dire straits
6-7-2012
பினாங்கு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப் பள்ளி
பக்1, நேசன்
மோசமான நிலையில் பினாங்கு சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளிபழனிவேல் அதிர்ச்சி


(7) குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள்
150 மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால், ஒரு பள்ளி குறைவான மாணவர்களை உடைய பள்ளி என கல்வியமைச்சு வகைப்படுத்துகின்றது. 523 தமிழ்ப்பள்ளிகளில் இவ்வகையைச் சேர்ந்த பள்ளிகளின் எண்ணிக்கை 122 ஆகும். 12 மாணவர்களுக்கும் குறைவாக 15 பள்ளிகளும் 11க்கும் 25க்கும் இடைபட்ட மாணவர் எண்ணிக்கையில் 58 பள்ளிகளும் உள்ளன. 13
அண்மையில் பிரதமர் வெளியிட்டுள்ள தேசியக் கல்வி செயல் திட்ட வரைவின் கீழ், 2016ஆம் ஆண்டு முதல் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மறுசீரமைப்புச் செய்ய 3 தெரிவுகள் கொண்ட திட்டத்தை அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது எனவும், அதனை எதிர்கொள்ள குமுகாயம் இப்பொழுதே தயாராக வேண்டும் எனவும் பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் கூட்டு வாரிய அமைப்பின் துணைத் தலைவரும் எனது நண்பருமான சொ.தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். 14
குறைவான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் சாதகமான, தெளிவான, வெளிப்படையான கொள்கை அரசிடம் இல்லை. அவ்வப்பொழுது ஊடகங்களில் மக்களால் பெரிதுபடுத்தப்படும் பள்ளிகளை மட்டும் ஓடோடி கவனிப்பது போல், போட்டிக்கு ஆளும் அரசியல்வாதிகள் செய்தி போட்டுக் கொள்கின்றனர். பின்னர் தாங்கள் விட்ட அறிக்கைகளை அவர்களே மறந்து விடுகின்றனர்.
குறைவான மாணவர் பயிலும் பள்ளிகளில் எவ்வித புறப்பாட நடவடிக்கைகளும் செயல்படுத்த முடிவதில்லை. இளம் வயதில் ஒரு மாணவருக்கு பள்ளியில் கிடைக்க வேண்டிய விளையாட்டுப் போட்டி, கதை சொல்லும் போட்டி, பேச்சுப் போட்டி இன்னும் பல் திறன் போட்டிகள் எதுவும் இல்லாத நிலையில், இவ்வகைப் பள்ளி மாணவர்கள் மன நிலையில் பாதிப்படைகின்றனர். இப்பள்ளிகளின் ஆசிரியர்களும் சோர்வடைந்து காணப்படுகின்றனர். மொத்தம் 6 மாணவர்கள் பயிலும் பள்ளியில் 11 ஆசிரியர்கள் வேலை செய்யும் பள்ளிகளும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

(8) சீனப் பள்ளியில் தமிழ் மாணவர்கள், பிற இன மாணவர்கள்
15-7-2012, ஒஓ கட்டுரை எண் 109இல் மனதை வாட்டும் செய்திஎன்னும் பகுதியில், சீனப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை தொட்டு எழுதியிருந்தேன். கோலாலம்பூர், பழைய தாவாக்கால் மருத்துவமனை அருகே உள்ள  SJK (C) CHIAO NAN சீனப் பள்ளியில் சுமார் 300 இந்திய மாணவர்கள் சேர்ந்து பயில்வதை குறிப்பிட்டிருந்தேன்.
சரவாக் மாநில பெத்தோங் பகுதி, மலுடாம் பட்டணத்தில் ஓர் அதிசயமான சீனப்பள்ளி உள்ளது. SJK (C) CHUNG HWA பள்ளியில் 129 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களில் 15 மாணவர்கள் மட்டுமே சீனர்கள். 54 மாணவர்கள் ஈபான் இனத்தவர். 40 மாணவர்கள் மலாய் இனத்தவர். மலுடாம் பட்டணத்து அருகில்  SJK (C) CHUNG HWA PUSA, PUSA BAZAAR என்னும் பள்ளியில், 100 மாணவர்களில் 60 விழுக்காட்டினர் மலாய்க்கார, ஈபான் இனத்தினர். 15
நமது கவனம் எல்லாம், தமிழ், மலாய்ப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை தொட்டே இருக்கின்றது. சீனப் பள்ளிகளில் பயிலும் பல்லாயிர தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை, அதனால் ஏற்படும் தமிழ் மொழி, இனம் சார்ந்த விளைவுகள் பற்றி எந்தத் தரப்பினரும் கவலை கொள்வதில்லை.

(9) பள்ளிக்குள் ஒற்றுமையில்லை
தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் ஆகிய தரப்புகளுக்கிடையே ஒற்றுமையின்மை, ஒருமித்த கருத்தின்மை தமிழ்ப்பள்ளிகளில் கற்பிக்கும் தரத்தை பாதிப்படையச் செய்கின்றன. ரா.வல்லிக்கண்ணன் 5 ஆண்டுகள் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளராக பணியாற்றினார். இவர் பணி செய்த காலத்தில், தமிழ்ப்பள்ளிகளில் தலைமையாசிரியர்-பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடையிலான பிணக்குகளே அதிகம் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். 16

(10) பள்ளிக்கு வேன், பேருந்து வசதி
தமிழ்ப்பள்ளிகள் சொந்த வேன், பேருந்து வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். பள்ளிகளின் பல்வேறு கல்வி புறப்பாட நடவடிக்கைகளுக்கு சொந்த வாகன வசதி துணை புரியும். ஜூன் 2012இல், சிம்பாங் லீமா, மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஓம்ஸ் அறவாரியம் தலா ஓரு வேனை அன்பளிப்பு செய்த இனிப்பான செய்தியை நாம் பத்திரிகைகளில் படித்திருப்போம். 17

(11) தமிழ்ப்பள்ளிகளுக்கான உச்சநிலைத் தீர்வு காணும் நிலை அமைந்தது
- அதைக் கெடுத்தது மஇகா
27-6-2011இல் நாட்டில் ஓர் அதிசயம் நடந்தது. மலேசிய தமிழ் அறவாரியத்தின் முயற்சியின் பயனால், முதன் முறையாக தேசிய முன்னணி, மக்கள் கூட்டணி இந்தியத் தலைவர்கள் நாடாளுமன்ற வட்ட மேசை கூட்டமொன்றில் சந்தித்து தமிழ்ப்பள்ளி வளர்ச்சி தொட்டு பேசினர். அக்கூட்டத்தை பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி உரை நிகழ்த்தி தொடக்கி வைத்தார். இந்த கூட்டு முயற்சியை வரவேற்றுப் பேசிய அமைச்சர் நஸ்ரி, தமிழ்ப்பள்ளிகளின் சிக்கல்களைத் தீர்க்க அரசு முழு ஒத்துழைப்பு நல்க தாம் உதவ முன் வருவதாகக் குறிப்பிட்டார். 18 பேர் கொண்ட செயற்குழு ஒன்று அமைப்பதென்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தேசிய முன்னணியிலிருந்து அறுவர், மக்கள் கூட்டணி (பக்காத்தான்) சார்பாக அறுவர், தமிழ் அறவாரியம் உட்பட அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் அறுவர் என தேர்ந்தெடுக்கும் பொறுப்பு முறையே தேவமணி, குலசேகரன், பசுபதியிடம் விடப்பட்டது. முதல் நடவடிக்கையாக சிம்பாங் லீமா இரண்டு பள்ளியைக் கட்ட உரிமம் பெறுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. அல் ஆலோசகர்களின் மதியுரையைச் செவிமடுத்த மஇகா தலைவர்கள், தமிழ் அறவாரியத் தலைவர் எவ்வளவோ முன்னெடுப்பு செய்தும், ஒத்துழையாமை இயக்கம் நடத்தி, குமுகாய பச்சிளம் மாணவர்கள் அடைந்திருக்க வேண்டிய தமிழ்க்கல்வி வளர்ச்சி நிலைப் பயனை கெடுத்து விட்டனர். இத்தகாத செயலின் வழி மலேசிய தமிழ்ப்பள்ளி வரலாற்றில் மஇகாவின் தற்காலத் தலைவர்கள்,  அவர்களின் கட்சியின் மேல் மறையாத கரும்புள்ளியை வைத்து விட்டனர். 18, 19

(12) மக்கள் நகர்ந்தனர், பள்ளிகளை நகர்த்தவில்லை-
அரசு புதிய பள்ளிகளை கட்டுவதில்லை
பின்வரும் செய்திகளை அறியுங்கள் : (1) அம்பாங்கில் மேலும் ஒரு தமிழ்ப்பள்ளி வேண்டும் (2) கோத்தா ஆலாம் ஷா தொகுதிக்குள் மற்றொரு புதிய தமிழ்ப்பள்ளி (3) சுங்கை பீலேக்கில் புதிய தமிழ்ப்பள்ளி (4) 10 ஆயிரம் இந்தியக் குடும்பங்கள் வசிக்கும் சுங்கை லாலாங் வட்டாரத்தில் தமிழ்ப்பள்ளி தேவை (5) கோலாலம்பூரில் மேலும் 2 தமிழ்ப்பள்ளிகள் (6) புதிய தமிழ்ப்பள்ளிகளை அரசு கட்டலாம் (7) ஜொகூரில் 5 புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு தேவை!
மேற்கண்ட 7 செய்திகளையும் மன அழுத்தத்தைப் போக்கும் நகைச்சுவைத் துணுக்குகளாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். கல்வி அமைச்சருக்கோ கல்வி அமைச்சின் மலாய் அதிகாரிகளுக்கோ புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்ட அனுமதி வழங்கும் எண்ணம் சிறிதும் கிடையாது.
ஒரே ஓர் உதாரணத்திற்கு, கல்வி அமைச்சர் மொகிதின் யாசின் நிராகரித்த சிப்பாங், சுங்கை பீலேக் மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையைக் காண்போம்.
16-11-2011இல் Sinar Harian மலாய் நாளிதÊš ‘Penduduk mohon kerajaan bina SRJK (T)
- lima sekolah ditutup sebelum ini untuk tujuan pembangunan’ என செய்தி வந்தது. 20
கல்வியமைச்சில் அக்கோரிக்கையைக் கொடுத்தவர்களில் மஇகாவின் முன்னாள் செனட்டர் வீ.க.செல்லப்பனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுங்கை பீலேக்கில் புதிய பள்ளியைக் கட்டினால், 15 கி.மீ. தொலைவில் (??) உள்ள சிப்பாங் தமிழ்ப்பள்ளியும், 8 கிமீ தொலைவில் உள்ள  தெலுக் மெர்பாவ் தமிழ்ப்பள்ளியும் பாதிப்படையும் என்னும் அக்கறையுடன்உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து ஏதும் பேசாமலே, கல்வி அமைச்சர் மொகிதின் யாசின் புதிய பள்ளிக் கோரிக்கையை நிராகரித்து விட்டார். 21
அதிகமாக இந்தியர்கள் வாழும் சுங்கை பீலேக் பகுதியில் ஒரு புதிய தமிழ்ப்பள்ளி நிர்மானிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை தொடர்பாக நான் கல்வி அமைச்சுக்கு கடிதம் எழுதப் போகின்றேன்என மார்ச் 2010இல் சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் (அம்னோ) முகமட் ஜென் தெரிவித்திருந்தார் என்னும் செய்தியும் நம்மை ஆத்திரமடையச் செய்யும். 22

(13) 6 தமிழ்ப்பள்ளிகளுக்கு புதிய உரிமமாம்! இது நம்ப வேண்டிய செய்தியாம்
கடந்த 22-1-2012இல் நாட்டில் இன்னொரு தமிழ்ப்பள்ளி மாய வரலாறு நடந்தது. பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளிக்கு, நாட்டின் அனைத்து தலைமை ஆசிரியர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். பிரதமருடன் மலேசிய தமிழ்ப்பள்ளி குடும்பத்தினரின் நல்லுறவுஎன்னும் தலைப்பில் ஒரு மாபெரும் நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது. இந்தச் சந்திப்பில் பிரதமர் செய்த அறிவிப்புகள் பின்வருமாறு: (1) தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு வெ.340 கோடி (2) கின்ராரா பள்ளிக்கு வெ.35 லட்சம் (3.5 மில்லியன்) (3) பள்ளித் தளவாட பற்றாக்குறைக்குத் தீர்வு (4) 10 மாணவர்களுக்குக் குறைவாக இருந்தாலும் பள்ளி மூடப்படாது (5) தலைமை ஆசிரியர்கள், கல்விச் சான்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், அரசு சாரா இயக்கங்களைக் கொண்டு மாபெரும் மாநாடு நடத்தப்படும் (6) தமிழ்ப்பள்ளிகளுக்கான முழு விவர புளுபிரிண்ட் தயாரிக்கப்படும். 23, 24
இவ்வாண்டு முடியும் தருவாயில் உள்ளது. தேர்தலும்  நெருங்கி விட்டது. அரசின் மேற்கண்ட 6 அறிவிப்புகளில் ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை. “6 புதிய பள்ளிகள் நமக்கு பொங்கல் பரிசுஎன்று பழனிவேல் அன்றைய தினம் பேசினார். அடுத்த பொங்கலும் வரப் போகின்றது என்பதையும் பழைய பொங்கல் பரிசுஇன்னும் கிடைத்தபாடில்லை என்பதையும் பழனிவேலுவிடம் யாராவது ஞாபகப்படுத்த வேண்டும்.
(குறிப்பு : பேரா மாநிலத்திலும், இப்படித்தான், 2000 ஏக்கர் நிலம் தமிழ்ப்பள்ளிக்கு பொங்கல் பரிசாகத் தருவதாக 2009இல் அறிவித்தார்கள். 3 பொங்கல் வந்து விட்டது. நிலம் ??)
(14) Mock Cheque - மாதிரி காசோலை ஏமாற்று கலாச்சாரம்
மேற்குறிப்பிட்ட பேரளவிலான தமிழ்ப்பள்ளிகள் நிகழ்வு கின்ராரா தமிழ்ப்பளியில் நடந்தது அல்லவா? அன்றைய நிகழ்வில் கின்ராரா பள்ளிக்கு வெ.3.5 மில்லியன் (35 லட்சம்) வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார். இந்தப் பணம் கல்வி அமைச்சின் பணமல்ல. குதிரைப் பந்தய, சூதாட்ட நிறுவனங்களின் அறவாரியமான Community Chestஇன் பணமாகும். இந்தப் பணத்திற்காக பள்ளியின் அன்றைய தலைமை ஆசிரியர் போஸ்கோ ஏறி இறங்காத படிகள் இல்லை. Community Chestஐத் தேடி சொந்தமாக போக வேண்டுமாம். பின்னர் மீண்டும் அண்மையில் 1-11-2012இல் Community Chest மாதிரி காசோலைகள் வழங்கும் நிகழ்வு நடந்தது அல்லவா? இப்பொழுது பிரதமர் இதே கின்ராரா பள்ளிக்கு 2 மில்லியனுக்கான காசோலையைக் கொடுக்கின்றார். இவ்வாண்டு ஜனவரியில் இப்பள்ளிக்கு 3.5 மில்லியன் கொடுப்பதாகச் சொன்ன பிரதமரே தாம் சொன்னதை மறந்து விட்டார். எது எப்படி இருந்தாலும், பல பள்ளிகளுக்கு பல கோடி வெள்ளி மதிப்பிலான மாதிரி காசோலைகள் வழங்கப்பட்டும், இதுவரை எந்தப் பள்ளியும் ஒரு காசு பெற்றதில்லை. 25
மாதிரி காசோலை பெற்ற அனைத்து தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பள்ளி வாரியத் தலைவர்களிடம் பேசிப் பாருங்களேன். வெளிவராத உண்மைகள் ஏராளம் என்பது தெளிவாகும். கடந்த உலு சிலாங்கூர் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தேர்தலுக்கு முந்தைய நாளில் (24-4-2010), செரண்டா புதிய தமிழ்ப்பள்ளிக்கு (Minyak தோட்டப் பள்ளி இடப் பெயர்வு)  வெ.1 மில்லியன் கொடுப்பதாக பிரதமர் அறிவித்தார். பின்னர் அவ்வறிவிப்பை அரசியல்வாதிகள் மறந்து விட்டனர். உண்மையில் ஒரு செங்கற்கல்லும் இன்றுவரை நகர்த்தப்படாத இப்பள்ளிக்கு மாதிரி காசோலையை கொடுப்பது போல், ‘மாதிரிஅடிக்கல் நாட்டு விழாவை கல்வி அமைச்சர் 7-6-2012இல் நடத்தி 2.5 மில்லியன் கொடுப்பதாக அறிவித்தார். ஆகக் கடைசியாக மஇகா இவ்வாண்டு நவம்பரில் தயாரித்த நிதிப் பட்டியலில் இப்பள்ளிக்கு 2 மில்லியன் என குறிப்பு உள்ளது. பட்டியலைத் தயாரித்த இணைப் பேராசிரியர்என்.எஸ்.இராஜேந்திரனுக்கு பிரதமரும் துணைப்பிரதமரும் முன்பு அறிவித்த 1 மில்லியன், 2.5 மில்லியன் கணக்கெல்லாம் தெரியாது.  அப்பள்ளியின் வாரியத் தலைவர் ராமராவ் அண்மையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்தார். அதற்கு, துணை அமைச்சர் சரவணன், இவர்களை விளம்பரப் பிரியர்கள் என்று கண்டித்துரைத்தார். பெற்றோர்கள் உண்ணாவிரதம் என்றதும் இப்பொழுது வேலை நடக்கின்றது.
(15) 1 MDB, Community Chest நிதிகள் - அரசு தந்திரமாக நழுவிக் கொள்கின்றது
குதிரைப் பந்தைய சூதாட்ட நிறுவனங்களுக்குக் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியை சீன, தமிழ் பந்துவான் மோடால் பள்ளிகளுக்கு வழங்கும் திட்டத்திற்கு என Community Chest என பெயர் வைத்துள்ளனர். Community Chest போக, 1 MDB உள்ளே வருகின்றது. 1 MDB பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு சிறிதளவு நிதி கொடுக்குமாம்; அதற்கும் விண்ணப்பம் செய்ய வேண்டுமாம். எல்லாப் பள்ளிகளுக்கும் அரசே நிதியளிக்க வேண்டுமென கல்விச் சட்டம் 1996 பிரிவுகள் 27, 28 கூறுகின்றன. அவை :

சட்டப்பிரிவு 27
Minister to provide primary education
It shall be the duty of the Minister to provide primary education in government and government-aided primary schools

சட்டப்பிரிவு 28
Establishment and maintenance of national and national type schools
Subject to the provisions of this act, the Minister may establish national schools and national-type schools and shall maintain such schools. ஏற்பாடுகளால் இந்த புதிய வகை ஏற்பாடுகளால், அரசு தமது பொறுப்பை தட்டிக் களிக்கின்றது. குமுகாயம் இதை உணரவில்லை. 26

(16) பள்ளி நிர்வாகத்தின் நேரடி அரசியல் தலையீடு
முந்தைய கல்வி அமைச்சர் ஹிஷாமுடினின் உத்தரவைத் தாங்கி, 5-2-2009 தேதியிட்ட, kp/kppm/5 (10), கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளரின் கடிதம் ஒன்று நாட்டில் பக்காத்தான் ஆளும் மாநிலங்களுக்குச் சென்றது. 4 மாநிலங்களை ஆளும் பக்காத்தான் முதல்வர்களையோ அம்மாநிலங்கள் சார்ந்த ஆட்சிக்குழு உறுப்பினர்களையோ எந்தப் பள்ளிக்குள்ளும் பள்ளி நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது. என்னும் உத்தரவை, மறைமுகமாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. பட்டியலிடப்பட்டிருக்கும் தேசிய முன்னணி தலைவர்களை மட்டுமே பள்ளி நிகழ்வுகளுக்கு அழைக்க வேண்டும் என்னும் கட்டளை அதில் இருந்தது.
PPD Daerah Petaling Utamaவின் 11-3-2009 தேதியிட்ட பள்ளி முதல்வர்களுக்கான உத்தரவு கடிதத்தில் (PPDPU/PPP/A45781/03/02/007/01)  சிலாங்கூர் பள்ளிகள் இந்தியத் தலைவர்களை  அழைப்பதாக இருந்தால் டி.மோகன், கமலம், ஆர்.சுப்பிரமணியம், பழனிவேல், கே.பார்த்திபன். எஸ்.முருகேசன், கோமளா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரில் ஒருவரை மட்டுமே அழைக்க முடியுமாம். இவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழ் தெரியாது. தமிழ்க்கல்வி பற்றியும் ஒன்றும் தெரியாது.
இந்த உத்தரவுக் கடிதத் தலைப்பு : Watikah Pelantikan Wakil Menteri Pelajaran Malaysia Ke Majlis-majlis rasmi sekolah KPM di Negeri Selangor bagi tahun 2009. 27
அந்தச் சமயத்தில் மலேசிய கினி இணையதளம் பேட்டியெடுத்து எனது செய்தியை தரவுடன் வெளியிட்டிருந்தது.

(17) தமிழ்ப்பள்ளிகளில் - தமிழ் தெரியாத ஆசிரியர்கள்
தமிழ்ப்பள்ளிகளில், மலாய் போன்ற சில பாடங்களைப் கற்பிக்க மலாய் ஆசிரியர்களை கல்வி அமைச்சு அனுப்புகின்றது. பெரும்பாலான பாடங்கள் தமிழில் நடப்பதால் தமிழாசிரியர்கள் பள்ளி விடுப்பு எடுக்கும் காலங்களில் மலாய் இன ஆசிரியர்களை மாற்று ஆசிரியர்களாக வகுப்புகளுக்கு அனுப்ப முடியாமல் தலைமை ஆசிரியர்கள் தினறுகிறார்கள். மலாய் இன ஆசிரியர் ஒருவர், இருவர் என்றால் நடுத்தர தமிழ்ப்பள்ளி ஓரளவு சமாளிக்கும். சில சமயங்களில் 4 மலாய் இன ஆசிரியர்களை ஒரே நேரத்தில் ஒரு பள்ளியில் கல்வி அமைச்சு அமர்த்தி விடுகின்றது. உதாரணத்திற்கு டிங்கில் தமிழ்ப்பள்ளியில் 4 மலாய் இன ஆசிரியர்கள் வேலை செய்கின்றனர். அதன் அண்டைப் பள்ளியான பெர்மாத்தா பள்ளியில் மூவர் அவ்வாறு இருந்தனர். நல்ல வேளையாக அவர்கள் இப்பொழுது மாற்றலாகிச் சென்று விட்டனர். 28
தமிழ்ப்பள்ளிகளில், வேற்று இனத்தவரை துணைத் தலைமை ஆசிரியர்களாக ஆக்கிய சம்பவங்களும் உண்டு. உதாரணத்திற்கு 2009ஆம் ஆண்டு புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளியின் துணைத் தலைமையாசிரியராக வேற்றினத்தவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

(18) தமிழ்ப்பள்ளிகளில் பயிற்சி பெறாத ஆசிரியர்கள்
பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் காலங்களில் தற்காலிக ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றார்கள். இந்த தற்காலிக ஆசிரியர்கள் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், பள்ளிகளில் பல ஆண்டுகள் பணியாற்றுகின்றனர். இவ்வழக்கம் மாணவர்களின் கல்வித்திறனை பெரிதும் பாதிக்கின்றது. 2009ஆம் ஆண்டு ஜொகூர் மாநில நிலவரத்தை, தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ஜி.மனோகரன் சுட்டிக் காட்டியிருந்தார். 29

(19) 60% தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பட்டம் பெற்றிருக்கவில்லை
31-5-2011  தேதி நிலவரப்படி, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 9279 என மஇகா செனட்டர் ஜெ.உஷாநந்தினியின் கேள்விக்கு மேலவையில் கல்வி அமைச்சு பதில் அளித்தது. அன்றைய நிலவரப்படி, இவர்களில் 2971 ஆசிரியர்கள் மட்டுமே பட்டதாரிகளாம். இதர 6408 பேர் பட்டம் பெற்றிருக்கவில்லையாம். கல்வி அமைச்சு 2015க்குள் எல்லா இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டுமெனவும், 2020க்குள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பட்டம் பெற்றிருக்க வேண்டுமெனவும் இலக்கு கொண்டுள்ளது. பட்டம் பெற்றிராத ஆசிரியர்கள் பலர் தற்பொழுது பட்டப் படிப்பை மேற்கொண்டிருப்பது உண்மை. இன்னும் பட்டப்படிப்பு வாய்ப்பு கிடைக்காத ஆசிரியர்களுக்கு, இவ்வாய்ப்பை அரசு வழங்க வேண்டுமென செனட்டர் உஷாநந்தினி கேட்டுக் கொண்டதை நாம் நினைவு கூறுவோம். தமிழ்ப்பள்ளியில் தமிழ் கற்பித்தல் மேம்பட பட்டம் பெற்ற திறனாளிகளும் முறையாக பயிற்சி பெற்றவர்களுமே எதிர்காலத்தில் ஆசிரியர்கள் பணியை ஏற்க வேண்டும். 30

(20) அரசியல் பிழைப்பிற்கு தமிழ்ப்பள்ளி
மமுக (பிபிபி) கட்சியின் தலைவர் கேவியஸ் 2008 நாடாளுமன்றத் தேர்தலில் தைப்பிங் தொகுதியில் தோற்று விட்டார். இதன் விளைவாக அக்கட்சியைச் சேர்ந்த டி.முருகையா செனட்டராக்கப்பட்டு, பிரதமர்துறை துணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டார். செனட்டர் நியமன அடிப்படையில் வழங்கப்பட்டதால் இவர் வகித்த துணை அமைச்சர் பதவி மிகவும் குறுகிய கால நிச்சயமற்ற ஒரு பதவி என்பது எல்லோருக்கும் (அவருக்கும்) தெரியும். அந்நிலையிலும் அவர் வெ. 1 கோடியில் தமிழ்க்கல்வி அறவாரியம் ஒன்றை 7-3-2009இல் ஆரம்பித்தார். விவரம் தெரியாத அரசியல் தமிழர்கள் சிலர் அவர் பின்னால் ஓடினர். இந்த நாட்டில் உள்ள பணக்காரர்களைச் சந்தித்து, இந்த அறவாரியத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கம் அளித்து நிதி திரட்டப்படும் என்று டி.முருகையா, ஈப்போ தங்கும் விடுதி ஒன்றில் நடந்த அவ்வாறிய தொடக்க விழாவில் பேசினார். இன்று இவர் துணை அமைச்சர் பதவியில் இல்லை! இவர் ஆரம்பித்த அறவாரிய நிலை என்னவென்றோ, திரப்பட்ட நிதி நிலையின் கணக்கு நிலவரம் என்னவென்றோ யாருக்கும் தெரியாது! 31

(21) தமிழ் கற்கும் இந்திய மாணவர் எத்தனை பேர்?
3-11-2011இல், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் எம்.மனோகரன் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை தொட்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அவர் கேள்விக்கு கல்வி அமைச்சர் அளித்த பதில் பின்வருமாறு:
2009இல் : 108,867 மாணவர்கள்
2010இல் : 106,221 மாணவர்கள்
2011இல் : 102,412 மாணவர்கள் (ஜூன் 2011 வரை) 32

மாணவர்கள் எண்ணிக்கை சரிவு, தமிழ்ப்பள்ளிகளில் மட்டும் இல்லை; மலாய், சீனப் பள்ளிகளிலும் இதே நிலைதான் என தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.எஸ்.இராஜேந்திரன் அண்மையில் சில புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் எல்லா இனக் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை  எடுத்துப் பார்த்து, என்எஸ்சின் கூற்றை நாம் உறுதிபடுத்த வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு, பிறப்பு விகிதம் மட்டுமே காரணம் ஆகாது. நம்மின மாணவர்கள் மலாய், சீனப் பள்ளிகளுக்கு செல்வதே முக்கிய காரணமாகும். மலேசியாவில் தமிழ்க் கல்வியை இன்னும் பரவலாக மேலோங்கச் செய்ய, இந்த ஆய்வு மிக முக்கியப் பங்காற்றும் (இவ்வகை ஆய்வை எவரும் இன்னும் செய்யவில்லை). 33

(22) கல்வி அமைச்சில்
தமிழ் ஆசிரியர்கள் எண்ணிக்கை விழுக்காடு எவ்வளவு?
தமிழ்க்கல்வியின் நிலை நாட்டில் நன்கு வேறூன்றி உள்ளதாக அரசியல்வாதிகள் பேசுவர்! இது எந்த  அளவு உண்மை? நாட்டில் பணிபுரியும் 500,000 ஆசிரியர்களில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் 9279 என்றால், நம் விழுக்காடு வெறும் 1.85 மட்டுமே! இந்த விழுக்காட்டை உயர்த்த நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பெரிய கடல் போன்ற கல்வி அமைச்சு, 1.85% தமிழாசிரிய சமூகத்தின் மீது அக்கறை காட்டத்தான் வேண்டும் என்னும் தற்போதைய கட்டாய அரசியல் சூழ்நிலை, விரைவில் இல்லாமல் போய்விடும், எச்சரிக்கை!

(23) கண் முன்னே ‘9A’ பேராபத்து
அண்மையில் வெளியிடப்பட்ட, தேசியக் கல்வி செயல்திட்ட வரைவின்படி, அடுத்தாண்டு முதல் எஸ்பிஎம் தேர்வில் குறைந்தது 9A’ பெற்றவர்களே ஆசிரியர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர் என கல்வி அமைச்சர் அறிவித்து விட்டார். இதற்கு முன்பு 6A, 7A பெற்றவர்களும் ஆசிரியர் பயிற்சிக்கு கல்வி அமைச்சு சேர்த்துள்ளது. 34
மலாய்ப் பள்ளிகளுக்கு இந்த புதிய அறிவிப்பினால் எந்தப் பாதிப்பும் வராது. மலாய் இன மக்கள் தொகையின் காரணத்தால், அவர்களால் புதிய விதிமுறையிலும் தேவைப்படும் ஆசிரியர் எண்ணிக்கையை எட்ட முடியும். கடந்த சில ஆண்டுகளாக சீன இடைநிலைப் பள்ளியின் தைவான் நாட்டு கல்வித் திட்டத் தேர்வான UECயின் சான்றிதழுக்குஅரசியல் அழுத்தத்தால் அரசு ஏற்பு வழங்கி விட்டது. ஆக 9A’ எஸ்பிஎம் தேவை அவர்கள் பள்ளியைப் பாதிக்காது. 9A’ வரை எடுக்கும் எஸ்பிஎம் இந்திய மாணவர்களில் பெரும்பாலோர் வேறு துறை படிப்புகளுக்குச் சென்று விடுவர். நம்மின மாணவர் மக்கள் தொகையும் குறைவு. இந்த புதிய விதிமுறையின் விளைவால் தமிழாசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, தமிழ்ப்பள்ளிகள் வருங்காலத்தில் மூடு விழா காண வழி வகுக்கும் என்பதை யாரும் உணரவில்லை. இந்தியக் கல்விமான் ஒருவரும் இன்றுவரை இது தொட்டுப் பேசவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!

(24) மலாய் ஆரம்பப் பள்ளியில் தமிழை கட்டாயமாக்குவதா?
பத்திரிகை சங்கத் தலைவர் முனியாண்டி, ரத்னவள்ளி அம்மா, உலோக மறுசுழற்சி சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய மலேசிய தமிழ்மொழி நடவடிக்கை இயக்கம்’, 8-8-2012இல் தேசியப் பள்ளிகளில் தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டுமென கருத்து தெரிவித்தது. இவ்வாறான முயற்சி, காலப்போக்கில் தமிழ்ப்பள்ளிகளின் நிலைமையை பெருமளவு பாதிக்கும் என ஆசிரியரும், தமிழ்மொழி வல்லுனரும் திருத்தமிழ்வளைப்பதிவாளருமான நண்பர் சுப.சற்குணன் கருத்து  தெரிவித்திருந்தார். 35, 36
முன்னாள் பிரதமர் அப்துல்லா அமாட் படாவியின் ஆட்சி காலத்தில், மலாய்ப் பள்ளிகளில் தமிழையும், சீனப் பாடத்தையும் போதிக்கும் ஏற்பாட்டை செய்து வந்தார். இப்புதிய முயற்சியின் வழி மலாய் ஆரம்பப் பள்ளியை சீன, இந்திய பெற்றோர்களுக்கு முதன்மைத் தேர்வுப் பள்ளியாக்குவது அவரது நோக்கமென அறிவிப்பும் செய்தார். அத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய தமிழ், சீன ஆசிரியர்கள் பயிற்சிக்கும் அனுப்பப்பட்டனர். இருப்பினும் இத்திட்டம் வெற்றி பெற கல்வி அமைச்சின் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்காததால், படாவியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 37
மலேசிய அரசிடம் சீன, தமிழ் தாய் மொழிகளின் பால் சாதகமான அக்கறையான கொள்கை இல்லை. காலத்திற்கேற்ப அவ்வப்பொழுது மாறி வரும் கல்வி அமைச்சரும், பிரதமரும் ஆளுக்கொரு கொள்கையை அறிமுகப்படுத்துவதும் உத்தரவு போடுவதும் நம் நாட்டில் வழக்கமாகி விட்டது. இதுபோன்ற மொழிப் பிரச்சினைகளுக்கு  தீர்வு காண, நமது குமுகாயம் சீன சமூகத்துடன் முதலில் கருத்து பரிமாறிக் கொள்வது ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக அமையும். அரசிடம் நாம் வழங்கும் எந்தப் பரிந்துரைகளையும், சீனச் சமூகத்துடன் சேர்ந்தே செய்வது எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்கும்.

(25) MBMMBI Vs PPSMI : தமிழின் நிலை என்ன?
MBMMBI, Memartabatkan Bahasa Malaysia, Memperkukuhkan Bahasa Inggeris  (Upholding Bahasa Malaysia, Strengthening English Language) என்பது கல்வி அமைச்சின் புதிய மொழிக் கொள்கையாகும்.
மகாதீர் பிரதமராக இருந்த இறுதி ஆண்டில் (2003இல்), 19-7-2002 அமைச்சரவைக் கூட்ட முடிவுப்படி, அவசர அவசரமாக PPSMI (Teaching and Learning of Science and Mathematics in English) கொள்கையை நடைமுறைப் படுத்தினார். மகாதீரின் கொள்கை தமிழ், சீனப் பள்ளிகளுக்கும் வழுக் கட்டாயமாக்கப்பட்டது. தேசிய அளவில் சுய சிந்தனை, சுய விடுதலை, சுய மரியாதை கொண்ட அமைப்பு ஏதும் இன்றுவரை தமிழ்ப்பள்ளிகளுக்கு கிடையாது அல்லவா? கல்வி அமைச்சின் ஆணை இதுவென  தலை மேற்கொண்டு தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்கள் அறிவியலையும் கணிதத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கையான  PPSMIயை நடைமுறைப்படுத்தினர். இருப்பினும் தேர்வுக் கேள்வித்தாள் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
சீனர்களுக்கு  Dong Zong என்னும் இன தன்மான அமைப்பு உள்ளது அல்லவாDong Zong கட்டளைப்படி, மகாதீரின் கல்விக் கொள்கையை சீனப் பள்ளிகள் கண்டு கொள்ளவே இல்லை. சீனம், ஆங்கிலம் இரு மொழிகளில் கேள்வித்தாள் இருக்கும் நிலைமையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வழக்கம் போலவே சீனப் பள்ளிகளில் அறிவியலையும் கணிதத்தையும் முழுக்க முழுக்க மெண்டரின் மொழியிலேயே சீனர்கள் கற்பித்தனர்.
இவ்விரு பாடங்களும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டதால், தமிழரல்லதா வேற்றின ஆசிரியர்களும் தமிழ்ப்பள்ளிகளில் வேலைக்கு வந்து விடும் அபாயம் இருந்தது. காலப் போக்கில் தமிழ்ப்பள்ளிகள் மெல்ல மெல்ல அவற்றின் அடையாளத்தை விட்டுக் கொடுத்து தேசிய பள்ளிகளாக மாறும் பேராபத்தை எதிர்கொண்டன. தமிழ் அறவாரியத்தின் அன்றையத் தலைவர் உதயசூரியன் (இன்றைய சிம்பாங் லீமா, மிட்லண்ட்ஸ் பள்ளிகளின் கதை நாயகன்) இந்த ஆபத்தை உணர்ந்து சீனர்களுடன் ஒத்துழைப்பு நிலையைக் கையாண்டார்.
மகாதீர் PPSMIயை அறிமுகப்படுத்தும் பொழுது அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த மொகிதின் யாசினுக்கு அக்கொள்கை பிடிக்கவில்லை போலும். ஆட்சி மாறி, தாம் கல்வி அமைச்சரான பிறகு, மலாய் தேசியவாதியான மொகிதின் யாசின் எந்தவொரு வலுவான ஆய்வு ஆதாரமுமின்றி PPSMI கொள்கைக்கு மாற்றாக MBMMBI கொள்கையைக் கொண்டு வந்தார். இதன் விளைவால் தமிழ், சீன ஆரம்பப் பள்ளிகளில் அவரவர் தாய்மொழியினாலேயே அறிவியலையும் கணிதத்தையும் பயிலலாம் என்னும் பழைய நிலை மீண்டும் திரும்பியது. தமிழ், சீன மொழிப் போராட்டவாதிகளுக்கு இது பெரும் வெற்றி. இருப்பினும் தமிழ் சீனப் பள்ளிகளின் மொழிப் போராட்டவாதிகளுக்கு ஒரு பேரிடி காத்திருந்தது. இடைநிலைப் பள்ளிகளில் இனி இவ்விரு பாடங்களும் மலாய் மொழியில் கற்பிக்கப்படும் என்னும் நிலையைக் கேட்டு அவர்கள் முதலில் பொங்கி எழுந்தனர். எழுந்த வேகத்தில் இப்பொழுது தூங்கும் எரிமலையைப் போல் அமைதி காக்கின்றனர்.

(26) PAGE அமைப்பு
இதற்கிடையே நாட்டில் மீண்டும் PPSMI கொள்கையைக் கொண்டு வர னுயவin Datin Noor Azimah தலைமையிலான PAGE அமைப்பு (The Parent Action Group for Education Malaysia)  தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளது. ஸ்டார் ஆங்கில நாளிதழில் தனிப்பகுதி எடுத்துக் கொண்டு பல அறிவார்ந்த கட்டுரைகளை Noor படைத்து வருகின்றார். இந்த PAGE அமைப்பிற்கு சிலாங்கூரின் CPS jiyt® Shamsuddin Hamid உடன் போன்ற பல மாநில அமைப்புகள் ஆதரவாக செயல்படுகின்றன. நானும் பல PPSMI போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். 38
PAGE போராட்டத்தில் ஒரு பெரிய குறை உள்ளது. அவர்களுக்கு தமிழ், சீனப் பள்ளிகளைப் பற்றி அக்கறை, கவலை இல்லை. CPS தலைவர் Shamsuddin Hamidடுடன் இது பற்றி நான் பல முறை தர்க்கம் செய்துள்ளேன்.
நமது கொள்கை (சீனர், தமிழர்) தெளிவானது. ஆரம்பப் பள்ளியில் தாய் மொழியிலும், இடைநிலைப் பள்ளியில் ஆங்கிலத்திலும் அறிவியல், கணிதம் கற்பிக்கப்பட வேண்டும்.  MBMMBI, PPSMI கொள்கைகள் தமிழ்மொழிப் பயனீட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர்ந்து, சீனர் ஒத்துழைப்புடன் அதற்கேற்ற செயல்திட்டத்தை நாம் வரைய வேண்டும்.

குறிப்பு :
PAGE போராட்டங்களில், சீனர்கள் மெண்டரின் மொழியில் எழுதப்பட்ட பதாகைகளுடன் கலந்து கொள்கின்றனர். மொழி உணர்வு கொண்ட தமிழர்களை ஒருங்கிணைக்க அங்கே ஆள் இல்லை. இப்போராட்டங்களில் கலந்து கொள்ளும் தமிழர்கள் பெரும்பாலானோர் பட்டணத்தில் வாழும் ஆங்கில தாகம் கொண்டவர்களே ஆகும்.

(27) Education Blueprint - கல்வித் திட்ட வரைவு
கல்வி அமைச்சர் அறிவித்த அண்மைய கல்வித் திட்ட வரைவில் தமிழ், சீனக் கல்வியை வளப்படுத்தும் எவ்வகைத் திட்டமும் குறிப்பிடப்படவில்லை. Centre for Policy Initiatives என்னும் அமைப்பின் இயக்குநர், டாக்டர் Lim Teck Ghee இந்த கல்வித் திட்டவரை வினைப்பற்றி கூறும் சில கருத்துகளை அடுத்து காண்போம். புதிய பொருளாதாரக் கொள்கை (DEB, NEP) இந்த Education Blueprint மூலம் தொடரப்படுவதாக நான் அஞ்சுகிறேன். இஸ்லாமிய, மாரா பள்ளிகள் பெருகுவதற்கு வழி அமைக்கப்படுவதாகவும் எண்ணத் தோன்றுகிறது. 39
அரசியல் காரணங்களுக்காகவே மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்கின்றது என்பதையும் கல்விச் சட்டமான Education Act 1996லும் அண்மைய Education Blue Printலும் MBMMBI போன்ற கல்விக் கொள்கைகளிலும் தமிழ்க் கல்விக்கு இடம் இல்லை என்பதையும் மலேசியத் தமிழர்கள் உணர வேண்டும். இந்நிலையைக் கண்டு துவண்டு விடாமல், செய்யத்தக்க மாற்று வழிகள் எவையென ஆராய்வதே தமிழரின் அறிவிப்பூர்வமான செயலாகும்.

(28) KSSR vs KBSR
முந்தைய KBSR 3எம்மில் (வாசிப்பு, எழுத்து, கணக்கிடுதல்) கவனம் செலுத்தியதாகவும், இன்றைய KSSR 4எம் (வாசிப்பு, எழுத்து, கணக்கிடுதல், மனப்பாடம் செய்தல்) மேல் கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகின்றது. KSSR திட்ட நடைமுறையால் தமிழ்மொழி கற்பித்தலுக்கு, எவ்வித சாதக, பாதகம் ஏற்படும் என்பதை கண்டறிய வேண்டும். 40

(29) இடைநிலைப் பள்ளியில் தமிழ்
இடைநிலைப் பள்ளிகளில் 15 மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டுக் POL (Pupil’s own language)  வகுப்புகள் வழங்கப்படும் என்னும் பழைய பல்லவியைக் கேட்டு நமக்கு சலித்து விட்டது. இந்த POL வகுப்புகள் பள்ளி நேரத்திற்குப் பிறகு நடப்பதால், பெரும்பாலும் கற்பிக்கும் இலக்கு தோல்வியில் முடிகின்றது. பள்ளி நேரத்திலேயே தமிழ்மொழிப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என பினாங்கு ஜோர்ஜ்டவுன் மலேசிய இந்து சங்கப் பேரவைத் தலைவர் வை.பழனிசாமியும் ஐயா ஹாஜி தஸ்லீம் அவர்களும் முறையே டிசம்பர் 2011லும் ஏப்ரல் 2012லும் கருத்து தெரிவித்ததை ஆளும் அரசியல் தலைவர்கள் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். 41, 42

(30) சீனர்களுக்கு SMJK உண்டு! தமிழர்களுக்கு?
ஏப்ரல் 2012இல், Chinese language should be a must for SMJK Chinese Studentsஎன மசீச தலைவர் பேசியுள்ளார். 43
இடைநிலைப் பள்ளிகளில் இடைக்கால PPSMI நடைமுறை உட்பட, கற்பிக்கும் மொழி எங்கும் சமம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். 41 சீன இடைநிலைப் பள்ளிகளில், 27 பள்ளிகள் Rahman Talib அறிக்கை (பின்னர் அது Education Act 1961ஐ உருவாக்கியது) விளைவால், சீன கற்பிக்கும் மொழி சீனம் என்பதை கைவிட்டு, ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டன. மிஞ்சியது 14 சீன இடைநிலைப் பள்ளிகள் (41 - 27=14). இவை இன்று வரை Independent Chinese Schools என வழங்கப்படுகின்றன.  பின்னர் 70ஆம் ஆண்டுகளில் Independent  Schools Revival Movement என்னும் சிறப்பு இயக்கத்தின் வழி, Independent  (தன்னிச்சைப்) பள்ளிகளின் எண்ணிக்கையை 14 லிருந்து 60க்கு சீனர்கள் உயர்த்தினர். முன்பு திசை மாறிப் போனஅந்த 27 பள்ளிகளில் சில, பல்டி அடித்து திரும்பி வந்து Independent’ பிரிவினில் சேர்ந்து கொண்டன. சீன மொழியை கற்பிக்கும் மொழியாக முன்பு சில பள்ளிகள் விட்டுக் கொடுத்தாலும், அவை பாட நேரத்தில் சீனப் பாடத்தை கற்பிப்பதை விட்டுக் கொடுக்கவேயில்லை. டாக்டர் சுவாவின் கருத்து எவ்வகைப் பள்ளியைச் சார்ந்தது என்பது இப்பொழுது இன்று இங்கு கூடியிருக்கும் பேராளர்களுக்கு புரிந்திருக்கும். 

(31) சீனர்கள் நம்மை அழைத்தனர்!
நாம் அவர்களை அழைத்தோமா?
கல்விச் சட்டம் 1996இன் விளைவாக, 1, 2 நவம்பர் 1997இல் காஜாங் Dong Zong அமைப்பு, அதன் தலைமையகத்தில் தாய்மொழி கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. தமிழர்கள் சார்பாக, தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர் சங்கத்தின் அன்றைய செயலாளர் சாகுல் ஹமீது, அக்கருத்தரங்கில் கட்டுரை படைக்க அழைக்கப்பட்டிருந்தார்.44
என்றாவது தமிழர்கள் கருத்தரங்கு நடத்தி சீனர்களை அழைத்ததுண்டா?
இன மானம் என்னும் சிந்தனையில்லாமல் தமிழர்கள் மஇகா தலைவர்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருந்து வந்துள்ளனர். அனைத்து தமிழ் நிகழ்வுகளும் கருத்தரங்குகளும் மஇகா தலைவர்களையே சுற்றி சுற்றி வருகின்றன. கருத்தரங்குகள் நடத்த நிதி வேண்டி அவர்களிடம் செல்வதும் இந்நிலைக்கு ஒரு காரணம்.

(32) இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் இலக்கியம்
அரசு தேர்வில் ஒரு பாடத்தை 400 மாணவர்களுக்குக் குறைவானோர் எடுத்தால் அப்பாடம் தேர்வு நிலையிலிருந்து நீக்கப்படும். 1999இல் எஸ்பிஎம் தேர்வில் தமிழ் இலக்கிப் பாடத்தை 350 மாணவர்கள் மட்டுமே எடுத்தனர். எஸ்பிஎம் நிலை தமிழ் இலக்கியப் பாடம் ஆங்கிலேயர் காலந் தொட்டு இந்நாட்டில் தேர்வுப் பாடமாக இருந்து வருகின்றது. 1970ஆம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 5000 மாணவர்களுக்குக் குறையாமல் இலக்கியப் பாடத்தை எடுத்துள்ளனர்.
2000ஆம் ஆண்டில், சில தன்னார்வ ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்தனர். முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டு, கல்விச் சாதனங்கள் உருவாக்கப்பட்டன; பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன; ஆங்காங்கே இலக்கிய பயிலரங்குகள் நடத்தப்பட்டன. சில சமூக அரசியல் இயக்கங்கள் ஆங்காங்கே வகுப்புகள் நடத்தின. பேரா மஇகா, திருக்குறள் இயக்கம், மலாக்கா, தெலுக் இந்தான் தமிழர் சங்கங்கள், காப்பார் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இந்து இளைஞர் இயக்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகள் 2000 ஆண்டுகளில் தமிழ் இலக்கிய வகுப்புகள் நடத்தி எஸ்பிஎம் தேர்வில் இப்பாடம் நீடித்து வாழ அரும்பணி செய்தன. 2000-2004ஆம் ஆண்டுகளில் உமா பதிப்பக உதவியுடன் குறைந்த விலையில் இலக்கிய நூல்களை அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கும் முயற்சி நடந்தது. இந்தத் திட்டத்திற்கு பேரா மஇகா ஜி.ராஜு, ஜொகூர் மஇகா க.கிருஷ்ணசாமி ஆகியோர் நிதி வழங்கினர். மலாக்கா, தெலுக் இந்தான் தமிழர் சங்கங்களும் உதவி கரம் நீட்டின. 2006-2007ஆம் ஆண்டுகளில் இலவச நூல் அன்பளிப்புத் திட்டம் வரையப்பட்டது. எஸ்பிஎம் தமிழ் இலக்கிய தேசிய நடவடிக்கைக் குழு ஆண்டுதோறும் எஸ்பிஎம் தேர்வில் இலக்கியம் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தது. 45
2000ஆம் ஆண்டு அன்றைய கல்வி அமைச்சர் நஜீப் எஸ்பிஎம் திறந்த சான்றிதழ் முறையை (Open certificate) அறிமுகப்படுத்தினார். அதன் வழி எஸ்பிஎம் தேர்வில் பாட எண்ணிக்கை  உச்ச வரம்பு இல்லாமல் போனது. நிலைமை செம்மையாக நகர்ந்த அந்த கால கட்டத்தில், எஸ்பிஎம் தேர்வில் 14A, 15A என எடுத்தோருக்கு அரசு, உபகாரச் சம்பளம் வழங்காமல் 9A, 10A  எடுப்பவர்களுக்கு வழங்குவதாக பல குறை கூறல்கள் எழுந்தன. 17-6-2009 அமைச்சரவைக் கூட்டம் இந்த முறையை முடிவுக்குக் கொண்டு வந்து, 2010ஆம் ஆண்டு முதல் இனி எஸ்பிஎம் பாட உச்ச வரம்பு 10 என முடிவு செய்தது. இந்தப் புதிய விதிமுறையால் இனி தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடங்களில் ஒன்றையோ இரண்டையுமோ எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியது.

இதை உணர்ந்த தமிழ்ச் சமூகம், தமிழ் தினசரிகளில் கடும் எதிர்ப்புச் செய்திகளை வெளியிட்டது. எனது தலைமையில் வழுவான இலக்கிய மீட்புக் குழு அமைக்கப்பட்டது.  அமைச்சர் சுப்பிரமணியம் எங்களை அழைத்தார்.அமைச்சர் சுப்பிரமணியம் தலைமையிலான மஇகா குழுவினருக்கு 20-11-2009இல்பல அமைப்பினர் விளக்கம் அளித்தார்கள். நானும் நீண்டதொரு தெளிவான விளக்கம் அளித்தேன்.
இதன் பயனால் 4-12-2009இல் கூடிய அமைச்சரவை, 10+2 என்னும் அதிசய முறையில் கூடுதல் 2 பாடங்கள் எடுக்க அனுமதித்தது. 11-12-2012 அமைச்சரவைக் கூட்டம். கூடுதல் 2’இல் அரேபியப் பாடத்தையும் சேர்த்தது. ஏற்கெனவே எனது தலைமையிலான இலக்கிய மீட்புக்குழு, 12-12-2009இல் பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் தமிழைக் காப்போம், இலக்கியத்தை மீட்போம் என்னும் கருப்பொருளில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. திட்டமிட்டபடி பேரணி வெற்றிகரமாக நடத்த போர்ட் கிள்ளான் திருக்குறள் மன்ற இளைஞர்கள் பேருதவிகள் நல்கினர். தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம், தோட்ட மாளிகையை இலவசமாகக் கொடுத்தது. லோட்டஸ் நிறுவனம் நிதியுதவி செய்தது. தோட்டமாளிகை பிரகடனம்செய்யப்பட்டது. 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கையெழுத்து வேட்டை துவங்கியது. எங்களது நடவடிக்கை மறு ஆண்டு தைப்பூச உண்ணாவிரதப் போராட்டம் வரை தொடர்ந்தது. எஸ்பிஎம் தமிழ், தமிழ் இலக்கிய நிலவரங்கள் குறித்து  நான் எனது ஒப்பிட்டேன் ஓலமிட்டேன், இடி முழக்கம்நூலில் பல கட்டுரைகளில் எழுதியுள்ளேன். நாங்கள் நடத்திய பேரணி, அதன் விளைவால் எனக்கு போலீசார் தொடர்ந்து கொடுத்து வந்த தொல்லைகள், பத்துமலையில் பிரதமருக்கு எதிராக நாங்கள் செய்த ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் பற்றியெல்லாம் நிறைய தரவுகளுடன் கூடிய செய்திகள் உள்ளன. அவற்றைத் தொகுத்து தனி ஒரு நூலாக எழுதலாம் என்னும் எண்ணம் எனக்கு உள்ளது.

(33) 1987இல் தமிழுக்கு ஒரு திருப்பு முனை
மலேசியாவில் 1986ஆம் ஆண்டு ஆரம்பப் பள்ளிகளில் யூபிஎஸ்ஆர் தேர்வு அறிமுகமானது. 1981இல் இடைநிலைப் பள்ளிகளில் கேபிஎஸ்எம் (KBSM) என்னும் புதிய பாடத் திட்டம் ஆரம்பம் கண்டது. இந்த ஆண்டுக்கு முன்பு, தமிழுக்கென்று முறையான ஒரு பாடத்திட்டம் இடைநிலைப் பள்ளிகளில் கிடையாது. 1987 கேபிஎஸ்எம் வழி தமிழுக்கு 4 நன்மைகள் வந்து சேர்ந்தன. அவை : (1) முறையான பாடத்திட்டம், (2) பாடத்திட்ட விளக்கவுரை (HSP - Huraian Sukatan Pelajaran), (3) ஒரே பாட நூல் முறை, (4) ஆசிரியர்களுக்கு பயிற்சி.

(34) 1987இல் தமிழுக்கு தீங்கும் நேர்ந்தது
இடைநிலைப் பள்ளிப் பாடங்களை வகைப்படுத்தும் பொழுது, கூடுதல் பாடப்பிரிவில் (Mata Pelajaran Tambahan) தமிழ் சேர்க்கப்பட்டது. தமிழ் இலக்கியப் பாடம், பாடத் திட்டத்திற்கு வெளியே உள்ள பாடமாக (Mata Pelajaran di luar kurikulum) வகைப்படுத்தப்பட்டது. 10 பாட உச்ச வரம்பை 17-6-2009 அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது அல்லவா? அம்முடிவை தெளிவாக அறிவிக்க கல்வி அமைச்சு, 29-8-2009 தேதியிட்ட ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின் 10ஆவது பக்கத்தில் சீன, தமிழ் இலக்கியப் பாடங்கள், பைபிள் அறிவுப் பாடம்பஞ்சாபி, பிரெஞ்ச் மொழிப் பாடங்கள் ஆகியவை Mata Pelajaran di luar kurikulum என்று  வகைப் படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையால் தமிழ் இலக்கியத்திற்கு அரசு உதவி எந்த வடிவிலும் கிடைப்பதில்லை. சில பள்ளிகளில் எஸ்பிஎம் தமிழ் மாணவர்களுக்கு தாய்மொழி உணர்வுடன் ஆசிரியர்கள் இலக்கியத்தை சொல்லிக் கொடுக்க முயற்சி செய்கின்றனர். இந்த முயற்சிக்கும் நிறைய இடர்பாடுகள் உள்ளன.

(35) உயர்கல்வி நிலையங்களில் தமிழ்

(அ) மலாயா பல்கலைக்கழகம்
இன்று தவிர்க்கின்றேன். அடுத்தத் தொகுப்பில் விரிவாக எழுதுவேன்; அடுத்த வாய்ப்பில் விரிவாக பேசுவேன்.
(ஆ) உப்சி பல்கலைக்கழகம்
ஜூலை 2010இல், தமிழ் மொழியில் இளங்கலை பட்டப்படிப்பு உப்சி பல்கலைக்கழகத்தில் துவங்கியது. முதல் ஆண்டான 2010இல், 60 மாணவர்களுக்கு பாடம் நடத்த உப்சி தயார் நிலையில் இருந்தது. கல்வி அமைச்சு 20 மாணவர்களுக்கே இடம் கொடுத்தது. பின்னர் அப்பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டதால், மேலும் 14 பேருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2011லும் 2012லும் ஆண்டுக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே கல்வி அமைச்சு வாய்ப்பு வழங்கியது. 46
(இ) யுபிஎம் பல்கலைக் கழகம்
இங்கு சீன மொழிக்கு இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு வசதிகள் ஏற்கெனவே உண்டு. தமிழ்மொழிக்கு இந்த வாய்ப்பு இல்லை. . Institut Bahasa Moden ãÇÉš, Communication மொழியாக, பிற இன மாணவர்கள் அ, , , ஈ படிக்கும் நிலையில் மட்டுமே அங்கு தமிழ் உள்ளது. 47
மே மாதம் 2009இல் சாமிவேலுகல்வியமைச்சர் காலிட் நோர்டினை சந்தித்து தமிழில் பட்டப் படிப்பிற்கான கோரிக்கையை வைத்தார். அமைச்சர், மஇகாவின் கோரிக்கைக்கு இணங்கினார் என்றெல்லாம் செய்தி வந்தது. அதோடு சரி! இவ்விவகாரத்தை எவரும் கண்டு கொள்ளவில்லை.
அரசியலை நம்பிய தமிழின் மோசமான நிலைக்கு இந்த காலிட் - சாமிவேலு சந்திப்பு கதை போக  வேறென்ன சான்று வேண்டும்?

(ஈ) நல்ல செய்திகள் வந்தன! ஆனால்...
(i) கோலாலம்பூரில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விப் பட்டப்படிப்பு தொடங்கப்படவுள்ளது - ஜனவரி 2010 செய்தி. 48
(ii) OUM - Open University Malaysia - வர்த்தக நிர்வாகம், உற்பத்தி தொழிலியல் நிர்வாகம் ஆகிய துறைகளில் டிப்ளோமா கல்வியை தமிழில் வழங்கவிருக்கின்றது - ஜனவரி 2010 செய்தி. 49
(iii) பாலர் கல்வி முதல் எஸ்பிஎம் வரை விகாஸ் அனைத்துலகப் பள்ளியில் படிக்கலாம் - இங்கு தமிழ், மலாய், மாண்டரின், இந்தி, அரபு மொழிகள் இரண்டாவது மொழிகளாக விளங்கும்- ஏப்ரல் 2009 செய்தி. 50


(உ) தமிழ் காணாமல் போகும் இடங்கள்
எஸ்பிஎம் தேர்வுக்குப் பிறகு, பாலிடெக்னிக், மெட்ரிகுலேசன், அரசு டிப்ளோமா, அரசு அசாசி, அரசின் தொழிற்திறன் பயிற்சிகள் என எல்லா கல்வி நிலைகளிலும் தமிழ் இல்லாமல் போய் விடுகின்றது. அது போலவே எல்லாவித தனியார் கல்வி நிலைகளிலும் தமிழ்ப் படிப்போ, அதன் பயனீடோ இல்லை.


(36) தமிழ்க்கல்விக்கு ஆபத்தான சில சூழ்நிலைகள், கருத்துகள், பேச்சுகள்
(1) தமிழ், சீனப் பள்ளிகளை மூட வேண்டுமென Utusan மலாய் நாளிதழ் தலையங்கம் எழுதியது. 1971இல் Melen Abdullah Vs Public Prosecutor (1971) வழக்கில் Utusan தண்டிக்கப்பட்டது.
(2) 2010இல் தமிழ், சீனப் பள்ளிகளை மூட வேண்டுமென முக்ரிஸ் மகாதீர் கருத்துரைத்தார். இவர் இன்று மைய அரசில் துணையமைச்சர். தேசிய முன்னணி கெடாவைக் கைப்பற்றினால் இவரே அடுத்த மாநில முதல்வராக்கப்படுவார் என ஆருடம் உள்ளது.
(3) 20-9-2006இல் அன்றைய கல்வித் துணையமைச்சரான நோ ஒமார் ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் ஒரு புதிய தமிழ், சீனப் பள்ளியையும் கட்டப்படாது என நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசினார். இன்றைய விவசாயத் துறை அமைச்சரான இவர், சிலாங்கூர் மாநில அரசை தேசிய முன்னணி அடுத்த தேர்தலில் கைப்பற்ற இந்தியர்கள் உதவ வேண்டுமென்கிறார். சீனர்கள் வாக்குகளும் தேவையாம்.
(4) முன்னாள் வரலாற்றுப் பேராசிரியர் கூ காய் கிம் முன்பெல்லாம் அடிக்கடி ஒரே மொழி பள்ளியைப் பற்றி பேசியும் எழுதியும் வருவார். சீன மொழிப் பற்றாளர்கள் Star, Sun ஏடுகளில் அவருக்கு பலத்த  பதிலடி கொடுத்து வந்தனர்.
(6) 1-11-2009இல் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் பேச்சு :
ஒரே கல்வி முறை, மக்கள் அங்கீகாரத்துடனேயே அமல்படுத்தப்படும்”.
குறிப்பு : மேற்கண்ட பகுதிகள் 1 முதல் 6 வரை, எனது 3-1-2010 தேதியிட்ட ஒப்பிட்டேன் ஓலமிட்டேன் புத்தகக் கட்டுரை 14இன் ஒரு பகுதியாகும்.
(5) கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான முகிதின் யாசின், 8-6-2009இல் ஒரே மொழி, ஒரே மலேசியாஎன்னும் கோட்பாட்டால் மலேசியர்கள் கவரப்பட வேண்டுமென பேசினார்.
(7) ரசாக் கல்வி அறிக்கை - ultimate objectiveஇன்னும் உயிர்ப்பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் அப்துல்லா அமாட் படாவி 14-3-2005இல், புத்ரா ஜெயாவில் பேசியது: (1984-1986இல் இவர் கல்வி அமைச்சர்)
.....  He said he would continue with efforts to strengthen national schools so that they become the first choice of all the people.
“Two system will have the people moving along in a parallel line, and they will never meet. It is not good for the nation,” he said after an  ulama conference.


தமிழும் தேசிய மொழிகளுள் ஒன்றாயிருக்கும்!
With the benefit of hindsight, Lim Lian Geok’s concession on the official language issue were a major tactical mistake.
The UCSTA’s agreement to temporarily shelve the official language issue proved to be a costly concession. UMNO leaders regarded the issue as henceforth closed and UCSTA leaders never again found themselves in a comparable position of strength to press the issue

1955 நிலையை 2012 நிலையோடு ஒப்பிடுவோம்
துங்கு அப்துல் ரகுமான் 1955இல் எதிர்கொண்ட நிச்சயமற்ற தேர்தல் நிலையை, 2012இல் பிரதமர் நஜீப் துன் ரசாக்கும் எதிர்கொள்கிறார். 1955இல் சீனர்களுடன் நிதான, இணக்கப் போக்கைக் கையாண்டு துங்கு நல்ல அரசியல் விரகராகச் செயல்பட்டார். 2012இல் ...?

மொழியது இனிமை!
மொழிவதும் இனிமை!
அன்றைய Education Development Blueprint 2001-2010ஐ ஜூன் 2001இல் அரசு நடைமுறைப்படுத்தியது. அது சீன ஆரம்ப, இடைநிலை, உயர்கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சீனர்கள் கருத்து. அது சம்பந்தமாக Dong Zong என்ன சொல்கிறது பாருங்கள் :
(அ) 1957இல் சீனக்கல்விக்கு freehold நிலை!
(ஆ) 1961இல் சீனக்கல்விக்கு TOL (Temporary Occupation Land) நிலை!
(இ) 1996இல் சீனக்கல்விக்கு Squatters நிலை!
நன்றி : லிம் கிட் சியாங், 20-7-2002


சான்றென் விளக்கம்
1.    பக்கம் 28, the Star 15-12-2011; ஒஓ கட்டுரை எண் 100 (13-5-2012)
2.    கட்டுரைகள் 3, 4 LLG Soul of the Malaysian Chinese, Kua Kia Soong. LLG Cultural Development Centre  2010.
3.    மேலது.
4.    LLG கையேடு (LLG கலாச்சார மையம்),
5.    FOCUS  பக்கம் F17, Star 14-1-2011
6.    Advertorial, பக்கம் 17 Star 10-10-2011
7.    இராஜேசுவரி, தலைமை ஆசிரியர், செமினி தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்.
8.    Persatuan Guru Tadika Malaysia தலைவி புஷ்பா கிருஷ்ணன்
9.    பக்கம் N3, Star 22-11-2010
10.  N13, Star 12-4-2011
11.  பக்கம் 1, நேசன் 8-5-2012
12.  ஓசை 8-1-2012
13.  என்.எஸ்.இராஜேந்திரன், பக்கம் 3, நேசன் 11-9-2012
14.  பக்கம் 14, ஓசை 24-9-2012
15.  E4, Star, 15-11-2009
16.  ஓசை 8-9-2011
17.  பக்கம் 14, ஓசை 15-6-2012
18.  நண்பன் 28-6-2011
19.  நண்பன் 29-6-2011
20.  Sinar Harian 16-11-2011
21.  Surat dari Unit Korporat KPM
22.  நேசன் 2-3-2011
23.  பக்கம் 1, நேசன் 23-1-2012
24.  பக்கம் 1, சன் 23-1-2012
25.  பக்கம் 1, நேசன் 2-11-2012
26.  பக்கம் 3, நேசன் 27-10-2012
27.  11-3-2009 தேதியிட்ட கல்வி அமைச்சர் உத்தரவு
28.  நண்பன் 18-2-2009
29.  பக்கம் 10, நண்பன் 29-7-2009
30.  பக்கம் 4, நண்பன் 13-7-2011
31.  பக்கம் 19, நேசன் 8-3-2009
32.  பக்கம் 3, ஓசை 4-11-2011
33.  பக்கம் 2, நண்பன் 30-6-2012
34.  பக்கம் 1, நேசன் 15-10-2012
35.  பக்கம் 1, நண்பன் 8-8-2012
36.  பக்கம் 2, நண்பன் 23-8-2012
37.  எனது ஒஓ கட்டுரை எண் 14,   3-1-2010
38.  பக்கம் 5, Star 13-11-2011
39.  பக்கம் 14, Sun 26-9-2011
40.  பக்கம் 2, நண்பன் 28-12-2011
41.  பக்கம் 6, நேசன் 28-12-2011
42.  பக்கம் 16, ஓசை 1-4-2012
43.  பக்கம் N10, Star 1-4-2012
44.    பக்கம் 84, Tamil Education  in Malaysia, Shahul Hamid, Mother Tongue Education of Malaysian Ethnic Minorities, Kua Kia Soong, Dong Zong 1998.
45.  SPM தமிழ் இலக்கிய தேசிய நடிவடிக்கைக் குழு, கோலாலம்பூர் 2005
46.  நேசன் 19-2-2010
47.  நண்பன் 12-5-2009
48.  பக்கம் 15, ஓசை 3-1-2010
49.  பக்கம் 5, நண்பன் 24-1-2010
50.  பக்கம் 4, ஓசை 6-4-2009


சுருக்கக் குறிப்பு
மலேசியாவில் தமிழ்க் கல்வி:
நிலைக்கும் சவால்கள், மலைக்கும் சமூகம்

1.   பொது
தேசிய அளவில் தமிழ் இடைநிலை/உயர்நிலை மாணவர்களுக்கென திறனாளி ஆலோசகர் குழு இல்லை. அலுவலகம் இல்லை. ஆண்டு முழுதும் அழைத்து ஆலோசனை, உதவிகள் கேட்க தொலைபேசி எண்கள் இல்லை. பரிதவிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்ட செம்மை அறிவு படைத்த கல்வியாளர்கள் இல்லை. இப்பெருங் குறையைப் பற்றி சிந்தித்துத் தீர்வொன்றை முன்மொழிய எவரும் முன்வரவில்லை.

2.   தமிழ்ப் பள்ளிகள்
2.1.         மோசமான புற நிலை.
2.2.         மக்கள் இடம் பெயர்வு (migration), பள்ளியை நகர்த்த அரசிடம் தெளிவான கொள்கையில்லை.
2.3.         பள்ளிக்கு புதிய நிலங்களை அடையாளம் காணும் பொறுப்பை கல்வியமைச்சு ஏற்பதில்லை.
2.4.         பந்துவான் மோடால் (Bantuan Modal) என்னும் பாரபட்ச நிலை.
2.5.         பந்துவான் பெனோ (Bantuan Penuh) என்பதிலும் அர்த்தமற்ற நிலை.
2.6.         சமூகத்தின் ஒரு பகுதி மாணவர்கள் மலாய், சீனப் பள்ளிகளில் சேர்க்கப் படுதல்.
2.7.         தமிழர் அல்லாதவர் தமிழ்ப் பள்ளிகளில் எழுத்தராக வேலை செய்தல்.
2.8.         தமிழர் அல்லாதவர் தமிழ்ப் பள்ளிகளில் மலாய் கற்பிக்கின்றனர் (சீனர்கள் இந்நிலையை எதிர்க்கின்றனர்).
2.9.         பள்ளிகளின் நிலங்கள் நில ஆய்வு (land survey) செய்து gazette செய்யாமல் கிடப்பதால், மேம்பாட்டாளர்கள் கொடுத்த நிலங்களின் பகுதிகள் கை மாறுதல்; முழுமையாக பறி போகுதல்நெடுஞ்சாலைக்கு, கோயிலுக்கு.
2.10.       Cluster, High Performance போன்ற பள்ளி வகைகளில் தமிழ் பள்ளிகளுக்கு குறைவான வாய்ப்புகள்.

3.   பெற்றோர்கள் / சமூகம்
3.1.         பல பள்ளிகளில் இன்னும் வாரியம் அமைக்காமலிருத்தல்.
3.2.         Dong Zong போன்ற அமைப்புகளை இன்று வரை சமூகம் அமைத்து கொள்ளாமை.
3.3.         பள்ளிகளுக்குச் சொந்த பேருந்து, வேன் வசதிகள் இல்லாமை.
3.4.         பிரிந்து போன குடும்பங்கள், வறிய நிலைக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பள்ளிகள் சமூகச் சேவை மையங்களாக செயல்படுதல். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு நிதிச் சுமை அதிகரிப்பு, ஆசிரியர்களுக்கு பணிச் சுமை அதிகரிப்பு; இச்சுமையைக் குறைக்க பள்ளிக்கு வெளியே உள்ள பல நல்ல உள்ளங்களின் உதவியை நாடாமல் பள்ளி நிர்வாகம் சமூகத்தில் தனித் தீவு போல் ஒதுங்கி நிற்றல்.
3.5.         தமிழ்ப் பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளை அனுப்பாத பல்கலைக் கழக தமிழ் விரிவுரையாளர்கள், இணைப் பேராசிரியர்கள்.
3.6.         தமிழ்ப் பள்ளிகளுக்குத் தங்களது பிள்ளைகளை அனுப்பாத தமிழ்க் காப்பாளர்கள், தமிழ் பிரச்சார பீரங்கிகள், மஇகா, எதிர்கட்சி அரசியல் தலைவர்கள்!
3.7.         தமிழர்களின் குணம்முதலில் தாய்மொழியைக் கைவிடுவர்.
3.8.         7A பெறும் மாணவர்களை மட்டும் பாராட்டுதல்.
3.9.         கல்வித் தகுதி குறைவானவர்கள் பெ..., வாரியங்களில் பதவி வகித்தல்.
3.10.       மாநில அளவிலான தமிழ்ப் பள்ளி கூட்டு வாரிய அமைப்புகள் இல்லாமை.
3.11.       சினிமா, சீரியல் தாக்கம்.
3.12.       தமிழ் மொழிக்கு பொருளாதார நிலையை (economic status) உயர்த்த தனி கருத்தரங்கு தேவை.
3.13.       சமூகத்தின் நிதி வளம் கோயிலுக்குச் சென்று விடுதல்.



4.   ஆசிரியர்கள்
4.1.         ஆசிரியர்களுக்குள் ஒற்றுமையில்லை.
4.2.         தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கச் சச்சரவுகள்.
4.3.         பயிற்சி பெறாத தற்காலிக ஆசிரியர்கள்.
4.4.         பட்டதாரி ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருத்தல்.
4.5.         தலைமை ஆசிரியர்கள், அரசியல் கட்சிகளில் பதவி வகித்தல்.
4.6.         வரப்போகும் எஸ்பிஎம் 9A பேராபத்து.
4.7.         யுபிஎஸ்ஆர் 7A மாணவர் எண்ணிக்கையைக் கூட்டும் சமூக அழுத்தத்தால், பள்ளி நிர்வாகம் கல்வியில் பின் தங்கிய மாணவர்களை கவனிக்காமல் விடுதல்.
4.8.         திறன்மிகு ஆசிரியர்களை ஆறு வகுப்புகளுக்கும் பரவலாகப் பயன்படுத்தாமல், யுபிஎஸ்ஆர் தேர்வு, கெட்டிக்கார ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும பயன்படுத்துதல்.
4.9.         திறன்மிகு ஆசிரியர்கள் பட்டம் பெற்றபின் இடைநிலைப் பள்ளிகளுக்கு மாற்றலாகிச் செல்லுதல்.
4.10.       மலேசிய தமிழ் அறவாரியம் அமைத்துக் கொடுத்துள்ள வலைப்பதிவில் ஆகக் கடைசியான தகவல்களை பள்ளி நிர்வாகம் பதிவேற்றம் செய்வதில்லை (அரசு பகுதியின் எண் 5.12-ஐக் காண்க).
4.11.       செயல்படாத தலைமை ஆசிரியர் மன்றத் தலைமை (மாநில, தேசிய).
4.12.       பி..எல் வகுப்புகளின் தோல்விகளுக்கு ஆசிரியர்களும் சில சமயம் காரணமாகின்றனர்.
4.13.       பிஓஎல் வகுப்பு காசுக்கு ஆசைப்பட்டு, தமிழ் பாட நேரத்தில் இடம் பெற விடாமல் சில ஆசிரியர்கள் தடையாய் இருப்பது.
4.14.       பிஓஎல் வகுப்புகள் நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள்போக்குவரத்து வசதி, புறப்பாட வகுப்புகள், வெளி கூடுதல் வகுப்புகள்.
4.15.       தமிழ்ப் பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளை அனுப்பாத ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள்.
4.16.       தமிழ்ப் பத்திரிகை வாங்கி வாசிக்காத ஆசிரியர்கள்.
4.17.       நாட்டு நடப்புகள் அறியாத ஆசிரியர்கள்.
4.18.       கல்வி அமைச்சுகளின் அகப் பக்கங்களையும வாசிக்க முற்படாத ஆசிரியர்கள்.
4.19.       திறன்மிகு ஆசிரியர்களின் படைப்புகளை புத்தக வடிவில் கொண்டு வர எவரும் அக்கறை கொள்வதில்லை.
4.20.       Jabatan/PPD கூட்டம் என்று சொல்லி விட்டுக் கிளம்பி, சொந்த வேலையைப் பார்க்கும் தலைமை ஆசிரியர்கள்.
4.21.       பெற்றோர் ஆசிரியர் சங்கத் தேர்வை நியாயமாக நடத்தாமல்பக்கம்சாயும் தலைமை ஆசிரியர்கள்.
4.22.       இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர்கள் மன்றம் / கழகம் இல்லாத மாநிலங்கள்.
4.23.       பள்ளி வாரியம் அமைப்பதற்கு, தலைமை ஆசிரியர் தடைக் கல்லாக இருப்பது, ஒத்துழைப்பு நல்காமல் இருப்பது.




5.   அரசு / அரசியல் நிலை
5.1.         தேசிய முன்னணி + மக்கள் கூட்டணி, தமிழ்ப் பள்ளிக்கான நாடாளுமன்ற வட்ட மேசைக் கூட்ட முயற்சி - திட்டமிடப்பட்ட செயற்குழு அமையாமல் போனதற்கு காரணமாகும் மஇகா.
5.2.         மாநிலத் தமிழ்ப் பள்ளி அமைப்பாளர்கள் திறன், அனுபவ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படாமல், ஆளும் அரசியல் தலைவர்களின் வாய்ப்பாட்டுக்காரர்களாகத் தேர்ந்தெடுத்தல் (சில சமயம்)!
5.3.         தமிழ்ப் பள்ளிகளின் நிதிப் பொறுப்புகளை அரசு ஏற்காமல், சூதாட்ட, குதிரைப் பந்தைய நிறுவனமான PMP (Pan Malaysia Pool) அறவாரியமான Community Chest-இடம் ஒப்படைத்தல், அரசியல்வாதிகள் இவ்வமைப்பின் மாதிரி காசோலை (Mock Cheque) வழங்கும் நிகழ்வுகளை அடிக்கடி நடத்துதல். பின்னர் அறிவிக்கப்பட்ட நிதிக்கு பள்ளி சமூகத்தினரைநாயாய் பேயாய்அலைய வைத்தல்.
5.4.         புதிய வீடமைப்புத் திட்டங்களில், தமிழர் குடியேற்பு எண்ணிக்கை அடிப்படையில், புதிய தமிழ்ப் பள்ளிகளை அமைக்க நிலம் ஒதுக்கும் கொள்கை அரசியடம் இல்லை. SK, SMK பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்குவதோடு பள்ளிக் கட்டடங்களையும் கட்டிக் கொடுக்கும் பொறுப்பு பெரிய மேம்பாட்டாளர்களிடம் விடப்படுகிறது.
5.5.         பள்ளிகளுக்குஉரிமம்என்று கல்விச் சட்டம் 1996-இல் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு மாயைக் கருவியைக் காட்டி புதிய தமிழ், சீனப் பள்ளிகளை அமைக்கஉரிமம்இல்லையென கல்வியமைச்சு காரணம் காட்டுதல்.
5.6.         பள்ளிகளின் கட்டடங்களை ஜேகேஆர் கட்டும் நிலையில், பள்ளிக்கு ஒதுக்கப்படும் நிதி அளவில், பாதி அளவு மதிப்பு கட்டடமும் கிடைப்பதில்லை. பணம் நேரடியாக பள்ளிக்கு வழங்கப்படுவதில்லை.
5.7.         கணினி அறைகளை அரசு அமைப்பதில்லை. கணினி ஆசிரியர் சம்பளம், கணினி பயன்பாட்டு மாதாந்திர செலவுகளை அரசு ஏற்பதில்லை.
5.8.         சமயக் கல்விக்கு நேரடி அனுமதியில்லை; பாட நேரம் இல்லை; நிதி, பாட நூல் வசதியில்லை.
5.9.         ஆறு ஏக்கர் நிலம் ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டாயம் என்று Jabatan Pembangunan Bandar & Desa துறை சுட்டிக் காட்டியிருப்பதை அனைத்துத் தரப்பினரும் மறந்து போயினர்.
5.10.       பிரதமரின் வாக்குறுதியா? யார் சொன்னது? எங்களுக்கு ஒன்றும் தெரியாதே! எவ்வித ஆணைகளும் எங்களுக்கு வரவில்லையேஎன்று வாதிடும் கல்வியமைச்சின் அதிகாரிகள்.
5.11.       தமிழ்ப் பள்ளிகள் சார்ந்த பிரதமரின் தொடர் வாக்குறுதிகளை உடனுக்குடன் மறந்து விட்டு, அவரின் அடுத்தடுத்தவாக்குறுதி நிகழ்வுகளுக்குச் செல்லும் மஇகா தலைவர்கள்.
5.12.       அவ்வப்பொழுது மாறிவரும் பள்ளியின் தேவைகளையும் சிக்கல்களையும் பள்ளியின் நிர்வாகம் அவ்வப்பொழுது பதிவேற்றம் செய்து அரசிடம் கொண்டு சென்று பேச, மஇகாவிடம் முறையான வலைப்பதிவில்லை (ஆசிரியர் பகுதி எண் 4.10ஐக் காண்க).
5.13.       ஒவ்வொரு தமிழ்ப் பள்ளியின் கட்டட, புற நிலை குறைகளின் தகவல்கள் கல்வி அமைச்சிடம் இல்லை. கல்வி அமைச்சின் மாவட்ட அதிகாரிகள் தாங்களாக தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் நடைமுறை இல்லை.
5.14.       தமிழ்ப் பள்ளிகளை அமைப்பது, தொடர்ந்து நிதியளிப்பைச் செய்வது, கல்விச் சட்டம் 1996இன், சட்டப் பிரிவுகள் 27, 28இன் படி, கல்வி அமைச்சரின் சட்டப்படியான கடமையாகும். இந்தச் சட்டத்தை நினைவு கூர்ந்து, அது நமது உரிமை என்று பேசாமல் ஒவ்வொரு நிதியளிப்பையும் ஏதோ பெரிய உபகாரச் சம்பள நிகழ்வு போல் அரசியல்வாதிகள் விளம்பரப்படுத்திக் கொள்ள நமது இனத்தவரே உடந்தையாகின்றனர்.
5.15.       கல்விக் கொள்கையை உருவாக்க, மாற்று இனத்திற்கு துளி அதிகாரமும் இல்லை. கல்வி அமைச்சில் பணி புரியும் ஒரு சில தமிழ் அதிகாரிகளுக்கும் இதே நிலை.



6.   மாணவர்கள்
6.1.         அடையாள ஆவணங்கள் இல்லாத மாணவர்களின் நிச்சயமற்ற நிலை.
6.2.         கூடாப் பழக்கம், கூடிய பின் காணும் பாழ் ஒழுக்கம்.
6.3.         யுபிஎஸ்ஆர்ல் 7ஏ எடுத்தவர்கள் உட்பட, படிவம் ஒன்று முதலே தமிழை மறக்கும் மாணவர்கள்.
6.4.         தமிழ்ப் பள்ளிகளை விட்டு வெளியேறிய கையோடு தமிழ் மாணவர்களை இடைநிலைப் பள்ளிகளில் கவனிக்கும் அமைப்பு இல்லை.

7.   இடைநிலைப் பள்ளி
7.1.         மாவட்ட கல்வித் துறைகள், வேண்டுமென்ற தமிழ் ஆசிரியர்கள் இல்லாத இடைநிலைப் பள்ளிகளுக்கு தமிழ்ப் பள்ளி மாணவர்களை படிவம் ஒன்றுக்கு அனுப்புதல்.
7.2.         PMR, SPM, STPM தமிழ்ப் பாடங்களுக்கு போதுமான பாட, பயிற்சி நூல்கள் இல்லாமை.
7.3.         செயல்படாத முந்தைய STPM இலக்கிய வலைப் பதிவு (தற்போது ஜொகூர் மாநில ஆசிரியர் தமிழ்வாணன், PMR/SPM தமிழ், SPM இலக்கியம், STPM தமிழுக்கென்று 3 தனி வலைப் பதிவுகளை நடத்தி வருகிறார்).
7.4.         A: Teras பாடங்கள், B: Elektif பாடங்கள், இதைத் தாண்டி C: Tambahan பாடங்கள், D: Mata pelajaran Luar Kurikulum பக்கமே வர முடியாத 2010 சூழ்நிலை. பள்ளிப் பாட  package முறை. நல்ல வேளை போராடித் தடுத்தோம்.
7.5.         பள்ளி Pengetua பாட package போடுவார். கல்வியமைச்சு அதிகாரம் அவருக்கு உள்ளது என நினைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அச்சம். தமிழ்ப் பாடங்களை மீறி எடுத்தால், பள்ளி அடைவு நிலை விழுக்காடு விழும் என்று மிரட்டப்படுதல். வேண்டுமானால் பள்ளி மாறிப் போய்விடு என்று Pengetua நயமாக உரைத்தல்.
7.6.         எஸ்பிஎம் தமிழ் இலக்கியம்வீட்டில் விடப்பட்ட அனாதைப் பிள்ளை – Mata pelajaran luar kurikulum. தேர்வுக்கான formate, பாட புத்தகங்கள் மட்டும் அறிவிக்கப் பட்டிருக்கும். மற்ற தயாரிப்புகள் யாவும் சமூகத்தின் சொந்த முயற்சிகள்.
7.7.         எஸ்பிஎம் இல்க்கியத்திற்கு மஇகா பல தடவை நிதிப் பங்களிப்பு செய்திருக்கின்றது. அரசு haram ஆக்கிய பாடத்தை மஇகா halal ஆக்கும் பொழுது, அரசும் halal ஆக்க மஇகா ஏன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை?
7.8.         பள்ளி Pengetua தமிழ் எடுப்பதை மறைமுகமாகத் தடுக்கின்றார். பள்ளியில் பணி புரியும் இந்திய ஆசிரியர்கள் போராட முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள் ஆசிரியர்களுக்குக் கை  கொடுக்க முன் வருவதில்லை.

8.   பாலர் பள்ளி
8.1.         வசதி படைத்த, படித்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில, வாணிப சாயல் பாலர் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
8.2.         2008ம் ஆண்டு தேர்தல் வரை தேசிய முன்னணி அரசு தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளிகளை அமைத்ததில்லை. பாலர் பள்ளி போன்ற கல்வி கோரிக்கையை நாம் கல்வியமைச்சிடம் முன் வைத்தால் அது நாட்டின் கல்விக் கொள்கைக்கு முரணானது என்பார்கள். 2008 தேர்தலுக்குப் பின் பாக்காத்தான் அரசுகள் அவர்கள் மாநிலங்களில் பாலர் பள்ளிகளை CHILD நிறுவன உதவியுடன் அமைக்க ஆரம்பித்ததும், கல்வி அமைச்சும் அப்போட்டியில் குதித்தது. இப்பொழுது அதன் வேகம் தனிந்து விட்டது.