Wednesday, July 21, 2010

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல்

இவை எக்சல் வடிவில் தருவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தாவலிலும் (Tabs) மாவட்டங்கள் ரீதியாக பள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பகாங்
பினாங்கு
பேராக்
பெர்லிஸ்
சிலாங்கூர்
கிளந்தான்
கோலாலம்பூர் கூ.பிரதேசம்
மலாக்கா
நெகிரி செம்பிலான்
ஜொகூர்
கெடா

Tuesday, July 06, 2010

யுபிஎஸ்ஆர் தேவையா?

மதிப்பிற்குரிய நற்குணன் அவர்களுக்கு வணக்கம்.



உங்கள் பதிப்பைப் படித்த பிறகு, நீங்கள் மிகவும் முதிர்ச்சியாக சிந்திக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். உங்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும் உண்டாவதாக.



இவ்வளவு காலம் யுபிஎஸ்ஆர் சோதனையைப் பேரின வாதம் பிடித்த ஒரு கும்பல் ஆயுதமாகப் பயன்படுத்தி தமிழ்ப் பள்ளியையும், தமிழ் மாணவர்களையும், தமிழாசிரியர்களையும் கேவலப்படுத்தி வந்தது உண்மையிலும் உண்மை. அதற்கு நான் அறிந்த பல ஆதாரங்களை எடுத்து முன் வைக்கிறேன்.



1994ம் ஆண்டு சிலாங்கூரில் உள்ள சரஸ்வதி தமிழ்ப் பள்ளியும் குவாங் தமிழ்ப் பள்ளியில் மாவட்டத்திலேயே கடைசி இரண்டு இடத்தைப் பிடித்தன. அவை இரண்டிற்கும் 15 விழுக்காட்டிற்குக் குறைவாகவே மாணவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள். அதாவது 1 மாணவர் தேர்ச்சி அடைந்தால், 15 மாணவர்கள் தோல்வி அடைகின்றனர் என்று பொருள் கொள்ளலாம். அந்த ஆண்டு பிபிடி அந்த இரண்டு பள்ளிகளையும் எப்படிக் கேவலப்படுத்தியது தெரியுமா? மாவட்டத்தில் இயங்கி வந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் கூடியிருந்த கூட்டத்தில், இந்த இரண்டு பள்ளிகளின் பெயர்களையும் கூறி, இப்பள்ளிகளின் ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. அதனால்தான் படுமோசமான தோல்வி கண்டுள்ளது. எனவே, இவ்வாண்டு இப்பள்ளி ஆசிரியர்கள் யாவருக்கும் melintang / menegak யாருக்கும் போட்டு கொடுக்க மாட்டோம். மாறாக அந்த வாய்ப்பை bukan guruவுக்குக் கொடுப்போம் என்று அறிவித்தது.



இவர்களின் காழ்ப்புணர்ச்சியைக் கண்டு கொள்ள முடிகிறதா?



நிச்சயமாக முடியாது. ஆனால், அதற்கு முன்னாலேயே அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருந்த கபட நாடகத்தைப் ஊன்றிக் கவனித்தால்தான் உங்களுக்குப் புரியும். இந்த bukan guru வர்க்கத்தை மலாய்க் காரர்களாகவே அவர்கள் அனுப்பினார்கள். Pembantu tadbir, pekerja awam rendah, pembantu pejabat என்று எல்லாவற்றையும் மலாய்க் காரர்களால் நிரப்பி விட்டார்கள். இது பல்லின நாடு, ஆசிரியர்கள் அனைவரும் நீங்களே இருக்கிறீர்கள். Bukan guruவை எங்களுக்குக் கொடுத்து விடுங்கள் என்று பல்லிளித்துக் கொண்டு தந்திரமாக வாங்கிக் கொண்டார்கள்.



அதற்கு அடுத்து இன்னொரு கபட நாடகமும் அரங்கேறிக் கொண்டிருந்தது. அதாவது, 021, 022, 031, 032 என்ற எண்குறியைக் கொண்ட யுபிஎஸ்ஆர் சோதனைகளுக்குத் தேர்ச்சி மட்டத்தைத் தங்கள் விருப்பம் போல் உயர்த்தி வைப்பதுதான் அந்தக் கபடம் நிறைந்த சூழ்ச்சி. நம்முடைய மாணவர்கள் பதில் எழுதி அனுப்பும் இந்த எண்குறிக்குறியைக் கொண்ட விடைத் தாள்களை நாம் யாரும் திருத்துவதில்லை. அவை முழுமையாக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தத் தாள்களில் மாணவர்களை வீழ்த்தி விட்டால், அந்த மாணவன் ஒட்டு மொத்த சோதனையிலும் தோல்வியடைந்தவனாகக் கருதப்படுகிறான். அந்தத் தோல்வியின் காரணமாக அவன் ஓராண்டு புகுமுக வகுப்பில் பயிலும் நிலமையும் ஏற்படும். ஆனால், அது நமது பிரச்சனை அல்ல.



பாவம், இந்த மூன்று விஷக் காற்றுகளும் தமிழ்ப் பள்ளிகளைத் தாக்கும்போது அவற்றால் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. ஆகக் கடைசியாக நான் எடுத்துக் காட்டிய உதாரணத்தின் மூலம் ஆசிரியர்கள் சிறப்பு சம்பள உயர்வைப் பெற முடியாமல் போகிறது. அத்தோடு நில்லாமல் நமக்குக் கிடைக்கின்ற கொஞ்ச நஞ்ச வாய்ப்புகளையும் அவர்கள் அபகரித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.



இது முதலாவது உதாரணம். இப்போது இரண்டாவது உதாரணத்தைக் காண்போம். இது சுங்கை சிப்புட்டில் நடந்த சம்பவமாகும்.



அங்கு ஒரு தமிழ்ப் பள்ளியும் மலாய்ப் பள்ளியும் இயங்குகிறதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழ்ப் பள்ளியில் எத்தனை மாணவர்கள் பயில்கிறார்களோ, அதே எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் மலாய்ப் பள்ளியில் பயில்கிறார்களாம். ஒவ்வொரு ஆண்டும் 40 தமிழ்ப் பள்ளி மாணவர்கள் யுபிஎஸ்ஆர் சோதனை எடுத்தால், அதில் 10 மாணவர்கள் கூட தேறுவதில்லையாம். ஆனால், மலாய்ப் பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் தேறி விடுகிறார்களாம். இந்த ஒரு சூழலை மட்டும் தனிமையாக வைத்துப் பாருங்கள். ஏதோ தமிழ்ப் பள்ளியில் கோளாறு இருக்கிறது. ஆசிரியர்கள் ஒழுங்காகப் போதிப்பதில்லை என்றெல்லாம் சிந்திக்கத் தூண்டுகிறதா?



உங்களுக்கே இப்படி விபரிதமான சிந்தனை தோன்றுகிறது என்றால், சாதாரன பொது மக்களுக்கு எப்படிப்பட்ட பயவுணர்வு தோன்றும்?



ஆனால், உண்மை என்ன தெரியுமா?



அந்த மலாய்ப் பள்ளியில் பயின்ற அத்தனை இந்திய மாணவர்களும் தார்மீக அடிப்படையில் தோல்வி கண்டவர்களே. எப்படியென்றால், அவர்களுக்கு ஒரு 3ம் ஆண்டு தமிழ் மொழிச் சோதனையைக் கொடுத்தால்கூட ஒருவராலும் தேற முடியாது. எனவே, தார்மீக அடிப்படையில் இந்த இரண்டு பள்ளிகளின் இந்திய மாணவர்களையும் வரிசையாக அடுக்கினால், 40 தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்குப் பிறகுதான் இந்த மலாய்ப் பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களை நிறுத்த முடியும். ஆனால், இந்த சனியன் பிடித்த யுபிஎஸ்ஆர் சோதனையைக் காட்டி, நம்முடைய பள்ளியை ஒரேடியாக மட்டந்த தட்டி விடுகிறார்கள்.



இரண்டாவது கட்ட சோதனைக்கு வருவோம்.



நிச்சயமாக மலாய்ப் பள்ளிக்கு மாண்யங்களை ஏராளமாகவும், தமிழ்ப் பள்ளிக்கு கண் துடைக்கும் பணிக்காக சொற்பமாகவும்தான் கிடைக்கும். வெவ்வேறு அளவில் ஊட்டச் சத்தைக் கொடுத்துவிட்டு, குறைவாக வளர்ச்சியடைந்த ஒருவனை ஒப்பிடுவது நியாயமா?



இப்போது மூன்றாவது கட்டச் சோதனைக்கு வருவோம்.



011 - தேர்ச்சி மட்டம் = 40

031 - தேர்ச்சி மட்டம் = 51



012 - தேர்ச்சி மட்டம் = 40

032 - தேர்ச்சி மட்டம் = 51



இந்த வாதத்தை நீங்கள் மறுக்க விரும்பினால், இதற்கு முன்பு நான் எழுதிய மடலை மீண்டும் ஒரு முறை வாசிக்கக் கேட்டுக் கொள்கிறேன். தேர்ச்சி மட்டத்தை 40இல் இருந்து 50க்கு உயர்த்துவதும் 51க்கு உயர்த்துவதும் பள்ளியின் அடைவு நிலையில் மிகப் பெரிய வேறுபாட்டை உண்டாக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும். மலாய்ப் பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட அதே 40 புள்ளிகள் என்றால் 20 objektif கேள்விகளையாவது சரியாகச் செய்திருக்க வேண்டும். அதையே ஒரு புள்ளி உயர்த்தினால் இந்த 20 என்ற எண் 21ஆக உயராது. மாறாக 22 கேள்விகளைச் சரியாகச் செய்திருக்க வேண்டும். இப்போது நான் உங்களிடம் கேட்கப் போகும் கேள்வி உங்கள் தலையைச் சுற்றச் செய்யும். தமிழ்ப் பள்ளிக்குத் தேர்ச்சி மட்டம் 51 என்றால், ஒவ்வொரு மாணவரும் குறைந்தது எத்தனை objektif கேள்விகளுக்குச் சரியாக விடையளித்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். 26 கேள்விகளுக்குச் சரியாக விடையளித்திருக்க வேண்டும் அல்லவா? 011 என்றால் 20 கேள்விகளுக்குச் சரியாக பதிலளித்து தேர்ச்சி பெற்றுவிட முடியும் ஒரு மலாய்ப் பள்ளியில் பயிலும் இந்திய மாணவன். ஆனால் 031 என்பதற்காக 26 கேள்விகளுக்கு ஒரு தமிழ்ப் பள்ளி மாணவன் பதிலளிக்க வேண்டும்? 21 கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டால் மலாய்ப் பள்ளியில் பயிலும் இந்திய மாணவன் தேர்ச்சி பெற்று விட்டானாம். ஆனால், 25 கேள்விகளுக்குச் சரியாகப் பதில் அளித்த தமிழ்ப் பள்ளி மாணவன் தோல்வி அடைந்த விட்டானாம். நியாயமாகப் பார்த்தால் 25தானே பெரிது. இவர்களுக்குக் கணித மூளை இல்லாமல் கருவாட்டு மூளையா இருக்கிறது?



உங்களுக்கு இப்போது தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறதா?



இப்படி பூதவுடல் படைத்த சிலந்தி வலையில் தமிழ்ப் பள்ளி என்ற பூச்சிகள் சிக்கி அநியாயமாக அழிகின்றன.



என் எழுத்து நீண்டு கொண்டு போனாலும், கட்டாயத்தின் பேரில் இன்னும் எழுதுகிறேன்.



தேர்வை அகற்றும் முடிவில் என்னுடைய நிலைப்பாட்டை அறிய விரும்புகிறீர்கள்.



இந்த நிலைப்பாட்டை விளக்குவதற்குதான் மிக விரிவான மற்றும் அகலமான முன்னுரையை உங்கள் முன் வைத்தேன்.



வெறும் யுபிஎஸ்ஆர் சோதனையை அகற்றலாமா வேண்டாமா என்ற பிரச்சனையை மட்டும் பார்த்தால், உங்கள் வாதத்தின்படி மிக எளிதான முடிவைத் தேர்ந்தெடுத்து விடலாம்.



ஆனால், முந்திய பதிப்பில் நான் 2 அனுமானங்களை முன்வைத்தேன் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.



1. இந்நாட்டு அரசியல்வாதிகளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.

2. இவர்கள் ஏதோ ஒரு கபட நாடகம் ஆடுகிறார்கள்.



அறிவியல் பாடத்தில் ஒரு பரிசோதனைக்கு முன் நாம் அனுமானம் செய்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். அதுவே ஒரு குழு முறை பரிசோதனை என்றால், இந்த மடலாடலில் பங்கு பெறும் ஒவ்வொருவரும் தங்கள் அனுமானத்தை முன்வைக்கலாம். அந்த அடிப்படையில் நீங்களும் ஒரு அனுமானத்தை முன்வைப்பீர்களாக.



அப்படி இல்லை என்றால், இந்த 2 அனுமானத்தின் அடிப்படையில்தான் நாம் பரிசோதனையைக் கட்டியெழுப்பி ஒரு தியோரிக்கு வர வேண்டும். கல்வியமைச்சராகப் பதவியேற்ற நமது துணைப் பிரதமர் திடுதிடுப்பென்று ஒரு முடிவை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், இவ்விவகாரம் தொடர்பான மற்ற காரிய கர்த்தாவும் அவருடைய தாளத்திற்கு ஏற்றாற்போல் நடனமாடும் போக்கு உங்களுக்கு எந்தச் சந்தேகத்தையும் கிழப்பவில்லையா? குறிப்பாக தலைமையாசிரியர் மன்றம், எந்த ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்காமல், மாநாடும் நடத்தாமல், விவாதம் செய்யாமல் இதனை ஆதரித்துப் பேசியிருக்கிறதே? இது உங்கள் சந்தேகத்தை மேலும் கிழப்பவில்லையா?



எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாகவா பைத்தியம் பிடித்து விட்டது?



இல்லை இவர்கள் அனைவரும் இன்னும் புத்தி சுயாதீனத்தோடுதான் இருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டால், அடுத்த அனுமானத்தைப் பரிசோதிக்க வேண்டுமல்லவா? அதாவது இவர்கள் ஏதோ ஒரு கபட நாடகம் ஆடுகிறார்கள் என்று.



இந்த அனுமானத்தை நான் முன்பு குறிப்பிட்ட மாய ஜால வித்தைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஏதோ ஒன்று உங்களுக்குப் புரியாமல் புரியும்.



நான் இப்போது இன்னொரு புதிய கண்ணோட்டத்தை உங்கள் முன் வைத்து என் வாதத்தை முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.



மலாய்க் காரர்கள் அல்லாதவர்கள் அரசாங்க சோதனைகளில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் (என்னைப்போல்). அவர்கள் தனித் தனியே ஆங்காங்கு பல ஆய்வுகளை நடத்திப் பார்த்து, இச்சோதனைகளின் நம்பிக்கை தன்மையை சந்தேகத்தோடு காணத் தொடங்கி விட்டனர் (மீண்டும் என்னைப் போன்று....) எனவே, இனி இந்த யுபிஎஸ்ஆர் சோதனை தொடர்ந்து தாக்கு பிடிக்க முடியாது. ஆனால், யுபிஎஸ்ஆர் சோதனையில் மட்டும் கைவைத்தால், அது மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் கிளப்பும். ஏனென்றால், சீனப் பள்ளிகளும், தமிழ்ப் பள்ளிகளும் அந்தந்த சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, பிஎம்ஆர் சோதனையிலும் கை வைப்போம்..... இப்படி நயவஞ்சம் பிடித்த அரசியல் தலைவர்கள் சிந்தித்திருக்கக் கூடும்.



முன்னேறிய உலக நாடுகளிலும் சரி, மூன்றாம் உலக நாடுகளிலும் சரி, எங்காவது பொதுத் தேர்வுகளை நீக்கிவிட்டதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஏன் நம் நாட்டில் மட்டும் இப்படியொரு காரியம் நடைபெறுகிறது? இது ஒரு புரியாத புதிர். கால தேவதையின் காலடியில்தான் அதன் பதில் புதைந்து கிடக்கிறது. அந்த தேவதை அடுத்த எட்டு எடுத்து வைக்கும்போது பல உண்மைகள் அம்மலத்துக்கு வரும். ஆனால், அதற்குள் இந்த இந்திய சமுதாயம் என்னென்ன உரிமைகளை இழக்கப் போகிறதோ தெரியவில்லை.